களம் 2026ல்… திமுகவினருக்கு ஸ்டாலின் தந்த அட்வைஸ்!

Published On:

| By Kavi

Stalin advice to DMK party cadre

2026 சட்டமன்ற தேர்தல் வெற்றியில் விழுப்புரத்தின் பங்கு அனைவரையும் விஞ்சக்கூடிய அளவில் இருக்க வேண்டும் என்று மாவட்ட திமுகவினருக்கு கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, சென்னையில் இருந்து கார் மூலம் விழுப்புரம் செல்லும் வழியில் ஓலக்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 

காய்ச்சல் சிகிச்சை பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பணியாளர்களின் வருகை பதிவேடு, உள் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு பதிவேடு ஆகியவற்றைப் பார்வையிட்ட முதல்வர் அதன் விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

இந்த ஆய்வை தொடர்ந்து திண்டிவனம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திடீரென காரை விட்டு இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்த பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். 

அப்போது மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை மனுக்களை அளித்த நிலையில் இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தன்னுடன் வந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து திண்டிவனம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, களம்2026-இல் திமுக காணப்போகும் வெற்றியில் விழுப்புரத்தின் பங்கு அனைவரையும் விஞ்சக் கூடிய அளவில் அமைய வேண்டும் என மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு என்று ஆலோசனைகளை வழங்கி உள்ளார். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மரக்காணம் மீன்பிடி துறைமுகம், கோட்டக்குப்பத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகள், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து இன்று காலை இரண்டாம் நாள் கள ஆய்வின் ஒரு பகுதியாக சமூக நீதி போராளிகள் மணி மண்டபத்தை திறந்து வைப்பதற்காக புறப்பட்டுச் சென்ற போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சாலையில் வழி நெடுகிலும் பொதுமக்களும், திமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதல்வர்.

முன்னதாக ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்று விழுப்புரத்தில் இருந்தவாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share