நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார்.
மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்களின் மீதும் தங்களுக்கு தனி பாசம் உண்டு.
கோவிட் இரண்டாவது அலையின் போது தமிழ்நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்பை சுட்டிக்காட்டி நீதிபதி சந்திரசூட் ஒரு வழக்கின் போது பாராட்டியிருந்தார். அதற்காக இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை உயர்நீதின்றத்தின் மதுரை கிளை தமிழ்நாட்டில் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவு கூர்கிறேன்.
நீதி நிர்வாகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாக பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும் நீதிமன்றங்களுக்கு தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
இந்த நேரத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நான் மூன்று முக்கியமான கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.
நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதி நியமனங்கள் இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக மாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ராகுல் தகுதிநீக்கம்: அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு!
தொடரும் சோகம்: மின்சாரம் தாக்கி யானை பலி!