உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தயக்கம்? – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேள்வி!

அரசியல்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை காலம் தாழ்த்தாமல், துணை முதல்வராக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசும்போது, “திமுகவின் வெள்ளி விழா மற்றும் பொன் விழாவை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை ஸ்டாலின் கொண்டாடியிருக்கிறார். வைர விழா ஆண்டை கொண்டாடுவதற்கு, திமுகவின் எதிர்காலத்தை வழிநடத்துவதற்கு நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்.

கலைஞர் மறைவிற்கு பிறகு, திமுக ஆட்சி மீண்டும் அரியணை ஏறுமா? ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? வெற்றிடம் ஏற்பட்டது என்றெல்லாம் பத்திரிகைகள் யூகம் சொல்லினர். அரசியல் தலைவர்கள் ஆருடம் கணித்தார்கள். ஆனால், அதையெல்லாம் துச்சமென்று நினைத்து, உங்களுடைய கடும் உழைப்பால் திமுகவின் கெளரவத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்றியிருக்கிறீர்கள்.

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று  100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள். இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் தமிழ்நாட்டைப் பார்த்து ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு சமரசப்போக்குடன் சென்றால் சமரம், இல்லை யுத்தம் புரிகிறார்கள் என்றால் கொள்கை யுத்தம் என இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் முன்மாதிரியாக செயல்படுகிறீர்கள்.

உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியிருப்பது எனது வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய பாக்கியம். காரணம், என்னுடைய ஒவ்வொரு சோதனையான காலக்கட்டத்திலும் என்னை துணை நின்று தூக்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தல் போர்மேகம் சூழ்ந்துவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் முக்கியமானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கட்சி நிர்வாகிகள் உங்கள் மீது காட்டும் அன்பு, விசுவாசத்தை வேறு எந்த தலைவர்களுக்கும் காட்டுவதில்லை.

யாரை திமுகவில் முன்னிலைப்படுத்தினால் கவரமுடியுமோ, கட்சி நிர்வாகிகளை வெறியோடு கட்சிப்பணிகளை செய்ய சொல்ல முடியுமோ, அவர்களை தான் நாம் முன்னிறுத்த வேண்டும். உங்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கும் இன்னும் ஏன் தயக்கம்? உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டாமா? பேராசிரியர் பெரிய மனதோடு, ஸ்டாலினை துணை முதல்வராக ஏற்றுக்கொண்டார். நாங்களும் அதேபோல ஏற்றுக்கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தலைமை நீதிபதி வீட்டில் கணேஷ் பூஜை… காங்கிரஸ் மீது மோடி தாக்கு!

ஜெயம் ரவியை ஆட்டி வைக்கும் அந்த பாடகி யார்? கோவா இல்லையாம் சுத்தமான தமிழ் பொண்ணாம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *