சிறப்புக் கட்டுரை: 1969-2006…   ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் 37 ஆண்டு போராட்ட வரலாறு!

அரசியல்

வைணவர்களின் தலைநகரம் என்று போற்றப்படக்கூடிய ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவிலுக்கு எதிரே, தந்தை பெரியார் சிலை கடந்த 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை இடித்து அகற்றும் நாளே இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியதற்காக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கனல் கண்ணனுக்கு ஒரு வகையில் பெரியாரிய தொண்டர்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால் ஸ்ரீரங்கத்தில் பெரியார்  சிலை எப்போது வைக்கப்பட்டது, எப்படி வைக்கப்பட்டது என்ற வரலாற்றை  மறுவாசிப்புக்கும் மறு விவாதத்துக்கும் உட்படுத்தியிருக்கிறார் கனல் கண்ணன். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், அவரால் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை பற்றிய வரலாறு இப்போது மீண்டும் வெளிவந்திருக்கிறது.

பெரியாருக்கு சிலை ஸ்ரீரங்கத்தில் முதல் கூட்டம்

1969  ஜூலை 20 ஆம் தேதி  ஸ்ரீரங்கம் தெற்கு வாசல் கடை வீதியில்  உள்ள வாசுகி எலக்ட்ரிகல்ஸ் கடையில், பெரியார் பிறந்த தின விழா குழு கூட்டம் நடக்கிறது. அந்த கடை பெரியார் தொண்டர் மணி என்பவருடையது. அந்த கூட்டத்தில் முதன் முதலில் ஸ்ரீரங்கத்தில் பெரியாருக்கு சிலை வைக்க வேண்டும் என்று நகராட்சியை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சித் தலைவர் வெங்கடேஸ்வர தீட்சிதரின் அனுமதி

அதன்படி நகராட்சியிடம் மனு கொடுக்கப்பட்டது. நகரமன்ற கவுன்சிரான அய்யங்கார் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் உட்பட பல கவுன்சிலர்கள் சேர்ந்து இந்த ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள்.  அப்போது ஸ்ரீரங்கம் நகராட்சித் தலைவராக இருந்தவர்  ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர். பெரியார் ஏற்கனவே காங்கிரஸில் மாநிலத் தலைவராக இருந்தவர் என்பதால் அப்போது பெரியார்  மீது காங்கிரஸில் இருந்த பக்தி மான்களுக்கும் பெரிய அபிமானம் உண்டு. அந்த வகையில் பெரியாருக்கு சிலை வைக்க, இப்போதைய ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு எதிரே 12க்கு 12 என்ற அளவில் 144 சதுர அடி நிலத்தை திராவிடர் கழகத்துக்குக் கொடுப்பதற்கு வெங்கடேஸ்வர தீட்சிதர் தலைமையிலான ஸ்ரீரங்கம் நகராட்சி தீர்மானித்து அனுமதித்தது. நகராட்சி அனுமதி கொடுத்தாலும் அடுத்தடுத்து அரசு நிர்வாக நடைமுறையின்படி பல்வேறு கட்டங்களைத் தாண்டி 1973 ஆம் ஆண்டு இதற்கான அரசாணை போடப்படுகிறது. 1975 ஆம் ஆண்டுதான் நிலம் திராவிடர் கழகத்துக்கு ஒதுக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் நகராட்சித் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான வெங்கடேஸ்வர தீட்சிதரிடம் அப்போதே சில பிராமணர்கள் சென்று, ‘ராமசாமி நாயக்கருக்கு ரங்கநாதர் முன்னாடி சிலை வைக்கலாமோ?’ என எதிர்த்திருக்கிறார்கள். அதற்கு வெங்கடேஸ்வர தீட்சிதர், ‘நம்பிக்கை உள்ளவா உள்ளே போயி ரங்கநாதனை சேவிக்கட்டும்., நம்பிக்கை இல்லாதவா ராமசாமி நாயக்கர் சிலைய சேவிச்சுட்டு போகட்டும். நமக்கென்ன?’ என்று சொல்லிவிட்டாராம்.

ஏன் இவ்வளவு தாமதம்?

1969 ஆம் ஆண்டு தீர்மானம் போடப்பட்டு நகராட்சியும் அனுமதி கொடுத்தாலும் அதன் பின் நடைமுறை ரீதியாக  பல்வேறு தடைகளை சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதிதான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது.  இடையில் கலைஞரும், எம்.ஜி.ஆரும்தானே தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். அவ்வாறிருக்க பெரியார் சிலையை நிறுவ இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் ?

1973 ஆம் ஆண்டு  டிசம்பர் 24 பெரியார் காலமான நிலையில், அவரை அடுத்து மணியம்மையார் திராவிடர் கழக பொறுப்புக்கு வந்தார். அப்போது திராவிடர் கழகத்தில் இயக்க ரீதியாக சில குழப்பங்கள், பிரச்சினைகள், சலசலப்புகள் ஏற்பட்டன.  அதனால் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை அமைப்பதில் சில வருடங்கள் தாமதங்கள் ஏற்பட்டன.  75  இல் எமர்ஜென்சி வந்துவிட்டது. அப்போது எதுவும் செய்ய முடியவில்லை.

வெள்ளத்தில் சென்ற ஆவணங்கள்!

அதையடுத்து 1977 ஆம் ஆண்டு  ஸ்ரீரங்கத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.    இப்போது இருப்பது போல பெரிய பெரிய மாடிக் கட்டிடங்கள் ஸ்ரீரங்கத்தில் கிடையாது.  குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும்தான். அதுவும் திராவிடர் கழக நிர்வாகிகள் எல்லாம் குடிசை வீட்டிலும் சிறு சிறு ஓட்டு வீடுகளில் இருப்பவர்கள்தான். 77 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தை சூழந்த வெள்ளத்தில் பல பேரின்  சொத்து ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள் அடித்துச் செல்லப்பட்டன.  அதனால் மக்கள் தங்கள் ஆவணங்களை இழந்து பெரும் பாடு பட்டார்கள். அரசிடம் முறையிட்டார்கள்.

அதன் பின் வருவாய் துறை அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளைப் பார்த்து அவரவர்க்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் மீண்டும் அளிப்பதாக அரசு தெரிவித்தது. அந்த வகையில் திராவிடர் கழககத்தினர் பெரியார் சிலை அமைப்பதற்காக அரசு ஆணை உள்ளிட்ட ஆவணங்களை இழந்துவிட்டதால் அவற்றை மீண்டும் பெற வருவாய் துறை அலுவலகங்களில் பல முறை அலைந்திருக்கிறார்கள்.   பெரியார் சிலை அமைப்பதற்கான 144  சதுர அடி நிலத்தை திராவிடர் கழகத்திடம் ஒப்படைத்த ஆவணத்தை கோரி  ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு சென்றால்,  ‘இதெல்லாம் திருச்சியில்தான் இருக்கும். அங்கே போங்க’ என்று சொல்லிவிட்டார்கள்.  பிறகு திருச்சி சென்றால், ‘ஸ்ரீரங்கம் தாலுகா பிரிச்சிட்டதால அங்கதான் இருக்கும்’ என்று  அங்கேயும் இங்கேயும் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள் திராவிடர் கழகத்தினர்.   இதுமட்டுமல்ல பெரியார் சிலை அமைய ஒதுக்கப்பட்ட இடம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு எதிரில் உள்ள இடம். அந்த இடத்தில்தான் ஜீப் நிறுத்துவது, பிடித்துவரப்பட்ட டுவீலர்களை எல்லாம் நிறுத்தி வைத்திருப்பார்கள். எனவே கிட்டத்தட்ட அந்த இடம் போலீஸ் ஸ்டேஷன் வசத்தில்தான் இருந்தது. தங்களிடம் இருந்த ஒரு சர்வே ஸ்கெட்ச் சை மட்டும் வைத்துக் கொண்டு  ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனிலும் போய் முறையிட்டு அந்த இடத்தைக் கேட்டிருக்கிறார்கள் திராவிடர் கழக நிர்வாகிகள். தாலுகா அலுவலகம், காவல் நிலையம், ஆவணக் காப்பகம் என்று பெரியார் சிலை நிறுவ அரசு கொடுத்த நிலத்துக்கான அரசு ஆவணத்தை மீட்கவே சுமார் ஏழெட்டு வருடங்களை செலவிட்டிருக்கிறார்கள் திராவிடர் கழக நிர்வாகிகள். அதன் பின் ஆவணம் மீட்கப்பட்டு, 96 ஆம் ஆண்டு அந்த இடத்தில் பெரியார் சிலை அமைய இருக்கும் இடம் என  திக தலைவர் வீரமணி தலைமையில்  கல்வெட்டு அமைக்கப்பட்டது.

பெரியார் சிலை கனவுகளும் திட்டங்களும்

அதையடுத்து சிலை வைப்பதற்கான பொருளாதாரம். குறிப்பிட்ட சிலர் சிலை வைப்பதற்கான தொகையை பொறுப்பேற்றுக் கொள்வதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டு முடியாமல் போய்விட்டது.  கோ.பாலு தலைமையில் சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.   இதில் திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு இடையே பல கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.

’பெரியார் 95 வயது வரை வாழ்ந்தார். அதனால் 95 அடியில் சிலை வைக்க வேண்டும் என்று அப்போதே திராவிடர் கழக நிர்வாகிகள் சிலர் கூறியிருக்கிறார்கள். 12க்கு 12 அடியில எப்படிய்யா இவ்வளவு உயர சிலை வைக்க முடியும், காசுக்கு எங்க போறது என சிலை அமைப்புக் குழுவுக்குள்ளேயே விவாதங்கள் வெடித்திருக்கின்றன.  கீழே படிப்பகம், மேலே சிலை வைக்கணும் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த  செல்வந்தர் ஒருவர் சிலை வைப்பதற்கான தொகையை ஏற்பதாக சொல்லியிருந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். பிறகு  ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டல் அதிபர் பெரியார் தொண்டரும்  கூட.  அவர், பெரியாருக்கு வெண்கல சிலை  வைப்பதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் என சொன்னார். திக நிர்வாகிகள் குளிர்ந்துவிட்டார்கள். ஏனெனில் வெண்கச் சிலை அமைப்பதற்கு அப்போதே  இரண்டரை லட்சம் ரூபாய் வரை செலவாகும்.  அப்பாடா பெரியார் சிலை விரைவில் கண் மலரும் என்று திராவிடர் கழகத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அந்த  ஹோட்டல் அதிபர் வைத்த நிபந்தனை சிலை அமைப்புக் குழுவில் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது.

ராமருக்கு அனுமார் போல பெரியாருக்கு நான்

அப்படி என்ன நிபந்தனை விதித்தார் அந்த ஹோட்டல் அதிபர்?  ‘நான முழு பொறுப்பேற்று பெரியார் வெண்கல சிலையை வைக்கிறேன். பெரியார் காலடியில் எனக்கு அரை உருவ சிலை  ஒன்று வைக்கவேண்டும். எனக்கு அந்த மரியாதை கொடுக்கணும்’ என்பதுதான் அந்த ஹோட்டல் அதிபரின் நிபந்தனை.

இதுகுறித்து சிலை அமைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  இருபது வருடங்களாக பெரியார் சிலை அமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த சீனியர் திக நிர்வாகிகள் இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு சரி காரியம் நடக்கட்டும் என்றனர். ஆனால் அப்போது திகவின் இளைஞர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.   ராமருக்கு கீழே அனுமன் சிலை மாதிரியா என்று கேட்டு எதிர்த்தனர். அதனால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

அர்ஜுன் சம்பத்தின் ஆரம்ப காலம்

இப்படியாக பல்வேறு கட்டங்களைத் தாண்டி  சீனி விடுதலை அரசு தலைமையில் பெரியார் சிலை அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுவின் சார்பில், ’இனியும் தாமதம் வேண்டாம். பெரியாருக்காக கனவுத் திட்டங்கள் தீட்டுவதைவிட எளிமையான முறையாக இருந்தாலும் அதை நடைமுறையில் காட்டுவோம் என தீர்மானித்து  2006 ஆம் ஆண்டு ஒரு சிமெண்ட் சிலை உருவாக்கப்பட்டது.  டிசம்பர் 16 ஆம் தேதி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலை திறப்பது என முடிவெடுக்கப்பட்டு விழாவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் நடந்தன. இந்த நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலை அந்த பெரியார் சிலை தாக்கப்பட்டு பெயர்க்கப்பட்டது.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுக்க பெரியார் தொண்டர்கள் போராட்டங்களில் இறங்கினார்கள். அப்போது முதல்வர் கலைஞர் கருணாநிதி.  இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டது.  அப்போதுதான் அவர் இந்து இயக்கங்களில்  தலையெடுக்கிறார்.   ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தகர்க்கப்பட்டதை கண்டித்து சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அயோத்யா மண்டபத்துக்குள் பிராமணர்களை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

பிராமணர் சங்கம் மறுப்பு

இதையடுத்து அப்போதைய பிராமண சங்க தலைவர் நாராயணன், ‘ ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தாக்கப்பட்டதை பிராமணர் சங்கமும் கண்டிக்கிறது.  இந்த சம்பவத்துக்கும் பிராமணர் சங்கத்துக்கும், பிராமணர் சமூகத்துக்கும் தொடர்பில்லை’; என்று  அறிக்கை வெளியிட்டார்.  ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை தாக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு ஸ்ரீரங்கத்துக்கு வந்த சாமியார் தயானந்த சரஸ்வதி, ‘பெரியார் சிலை ஸ்ரீரங்கத்தில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது’ என்று பேட்டி கொடுத்திருந்தார். எனவே  தயானந்த சரஸ்வதி தூண்டிவிட்டுத்தான் அர்ஜுன் சம்பத் இதை செய்தார் என்று தயானந்த சரஸ்வதி மீதும் வழக்கு போட தயாரானது போலீஸ்.  ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திவரும் தயானந்த சரஸ்வதி தனக்கு சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாளிதழ்களில் எல்லாம், ‘பெரியார் சிலை தாக்கப்பட்டது தவறு’ என்று விளம்பரம் கொடுத்தார்.

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து தன்னை காத்துக் கொண்டார்.  அதேநேரம் பெரியார் சிலை தகர்க்கப்பட்டதை எதிர்த்து போராடிய  புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும், ம.க.இ.க தோழர்கள், தி.க. தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றும்  பெரியார் சிலை வைப்பதைத்  தடுக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றமும் ஆவணங்களை பரிசீலித்து பெரியார் சிலை வைக்க தடை இல்லை என்று  அரிஜித் பசாயத்,  எஸ்.ஹெச். கபாடியா  ஆகிய நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

வெண்கலச் சிலையாக வந்து அமர்ந்த பெரியார்

இப்படி பல போராட்டங்களைக் கடந்து பெரியார் சிலை வைக்க அனுமதி கிடைத்தாலும், ஏற்கனவே வைத்திருந்த சிமெண்ட் சிலை தகர்க்கப்பட்டதால் வேறொரு சிலைக்கு என்ன செய்வது என திராவிடர் கழகத்தினர் பெரிதும் கவலைப்பட்டார்கள். அப்போதைய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ‘தேதி குறித்துவிட்டோம். அந்த தேதியில் நாம் பெரியார் சிலையை திறந்தாக வேண்டும். என்ன செய்தாவது பெரியார் சிலையை தயார் பண்ணுங்கள்’ என்று கூறிவிட்டார்.

வேறு எங்கேனும் பெரியார் சிலை  செய்து நிறுவுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருக்கிறதா என்று தமிழ்நாடு முழுதும் திராவிடர் கழக நிர்வாகிகளையும், பெரியார்  அபிமானிகளையும் தொடர்புகொண்டு ஸ்ரீரங்கம் திராவிடர் கழக நிர்வாகிகள் கேட்டனர்.  ஆனால் யாரிடமும் பெரியார் சிலை தயாராக இல்லை.

இந்த நிலையில்தான்…  திருச்சி அருகே லால்குடியில் தேவசகாயம் என்ற பெரியார் தொண்டர்  தன் சொந்த இடத்தில் வைப்பதற்காக வெண்கலத்தில் அமர்ந்த கோலத்தில் ஒரு பெரியார் சிலையை செய்து வைத்திருந்தார். தகவல் அறிந்ததும் இரவோடு இரவாக லால்குடி சென்ற ஸ்ரீரங்கம்  தொண்டர்கள், விஷயத்தைக் கூறியதும், ‘ஆகா…. நான் இங்கே அமரவைக்கலாம் என்று தயார் செய்த பெரியார்   ஸ்ரீரங்கத்தில் அமரப் போகிறாரா’ என்று மகிழ்ந்து சிலையை திராவிடர் கழகத் தொண்டர்களிடம் ஒப்படைத்தார்.   2006 டிசம்பர் 7 ஆம் தேதி அதிகாலை இந்து மத வாதிகளால் பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில்…. டிசம்பர் 8 ஆம் தேதி இரவு லால்குடி தேவசகாயம் மூலம் பெறப்பட்ட வெண்கலப் பெரியார் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. 2006  டிசம்பர் 17 ஆம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டோடு  தந்தை பெரியார் வெண்கலச் சிலை  கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது. 37 ஆண்டுகால போராட்ட வரலாற்றின் முடிவு இது.

கோ.பாலுவுக்குப் பிறகு  ஸ்ரீரங்க   பெரியார் சிலை அமைப்புக் குழுவின் செயலாளராக பணியாற்றியவர் திராவிடர் கழகத்தின் துடிப்பான நிர்வாகிகளில் ஒருவரான  சீனி விடுதலை அரசு. அவரது மதி நுட்பத்தாலும் துடிப்பாலும்தான் பெரியார் சிலை 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நிறுவப்பட்டது.   அதன் பிறகான சில ஆண்டுகளில் திராவிடர் கழகத்தில்  இருந்து வெளியேறி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தபெதிகவில் செயல்பட்டு வருகிறார் சீனி விடுதலை அரசு.

இனி பெரியாருக்கு தங்கச் சிலைதான்

இப்போது அவரிடம் நாம் பேசினோம்.   “ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை இருப்பதால் உள்ளூர் வாசிகளுக்கு எந்த இடையூறும் இல்லை. அவர்கள் இதை எதிர்க்கவும் இல்லை. ஆனால் வெளியூரில் இருப்பவர்கள்தான் ஸ்ரீரங்கத்தை மையமாக வைத்து பிரச்சினையை கிளப்பிட முனைகிறார்கள்.  2006 இல்  பெரியாரின் சிமெண்ட் சிலை  ஸ்ரீரங்கத்தில் அதிகாரபூர்வமாக நிறுவப்படும் முன்பே  அதை பரிவாரங்கள் இடித்தனர். அடுத்த ஒரே நாளில் வெண்கலச் சிலையாக பெரியாரை அங்கே நாட்டினோம். இப்போது வரலாறு தெரியாத கனல் கண்ணன்கள் இந்த சிலையை  அகற்ற முனைந்தால், அடுத்து பெரியாருக்கு  ஸ்ரீரங்கத்தில் அதே இடத்தில்  தங்கச் சிலையை அமைப்போம்” என்கிறார் உறுதிகொண்டவராய்.

37 ஆண்டு கால பெரியார் சிலையின் போராட்ட வரலாற்றை மறுபடியும் இந்த தலைமுறை அறிவதற்குக் காரணமான கனல் கண்ணனுக்கு நன்றி.

வேந்தன்

+1
0
+1
0
+1
0
+1
14
+1
1
+1
0
+1
0

1 thought on “சிறப்புக் கட்டுரை: 1969-2006…   ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் 37 ஆண்டு போராட்ட வரலாறு!

 1. இதை வாசிக்கும் போது மிகப்பெரிய வேதனை தான் ஏற்படுகிறது…
  அந்த இடத்தில் பெரியார் சிலை வைப்பதற்கு அனுமதித்து அந்த இடத்தை திராவிடர் கழகத்திடம், 1975 ஆம் ஆண்டே, ஸ்ரீரங்கம் நகராட்சி ஒப்படைத்ததாக இந்த கட்டுரையின் வழியாக அறிய முடிகிறது… உடனடியாக கி வீரமணி பெரியாருக்கு ஒரு சிலையை செய்து அந்த இடத்தில் வைத்திருக்க வேண்டியதுதானே?…
  திராவிடர் கழகத்திற்கு என்று பெரியார் அவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டு போயிருக்கிறார்…
  வீரமணி என்ன அவர் அப்பன் வீட்டு சொத்தில் இருந்தால் சிலை வைக்க தயங்கினார்..?
  சிலை வைப்பதற்கான செலவை யார் யாரையோ கேட்டு ஏற்றுக் கொள்ளச் சொல்லி கடுமையான முயற்சி செய்தார்களாம்… அயோக்கிய பயல்கள்…
  பெரியாருக்கு எதிரி பிராமணர்கள் இல்லை திராவிடர் கழகத்துக்காரர்கள் தான்…
  என்னவோ காசே இல்லாதது போல் வேண்டுமென்றே இழுத்தடித்து நாளை கடத்தி விட்டு 30 ஆண்டுகள் கழித்து அதுவும் யாரோ ஒருவர் தயார் செய்த அவர் சொந்த செலவில் தயார் செய்து வெண்கலச் சிலையை அந்த இடத்தில் வைத்தது பெரிய சாதனையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்…
  மூடநம்பிக்கை ஒழிப்பதற்கும் பகுத்தறிவை வளர்ப்பதற்கும் தானே பெரியார் அவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டு சென்றார்…
  பெரியாரின் சிலை நிற்பதே மூடநம்பிக்கை ஒழிப்போம் பகுத்தறிவு வளர்ப்பும் தான். பெரியார் சிலையை அந்த இடத்தில் நிறுவுவதற்காக உடனடியாக அவர் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஒரு சிலையை செய்து அந்த இடத்தில் உடனடியாக ஏன் வீரமணி நிறுவவில்லை..?
  மற்ற பெரியார் தொண்டர்கள் பாடுபட்ட அளவிற்கு கூட வீரமணி இந்த விஷயத்தில் சிரத்தை எதுவும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது…
  பெரியாரின் நூல்களை பெரியாரின் கருத்துக்களை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வேலையை கூட வீரமணி செய்யவே இல்லை…
  தெரு தெருவுக்கு பெரியாரின் நூல்களை இலவசமாக அச்சிட்டு கொடுத்திருந்தால் என்ன..?
  அதைச் செய்திருந்தால் இன்றைக்கு கனல் கண்ணன்கள் உருவாகி இருக்கவே மாட்டார்கள்!
  இன்றைக்கு பெரியார் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பாரோ அதைச் செய்வதுதான் பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகத்தின் பொறுப்பாளராக வருபவரின் வேலை…
  ஆனால் வீரமணி அதை ஒருபோதும் செய்ததாகத் தெரியவே இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *