இலங்கை அகதி கப்பல்: சிங்கப்பூர் கடற்படையினர் மீட்பு!

அரசியல்

இலங்கைஅகதிகளை ஏற்றிச் சென்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் தத்தளித்த கப்பலை, சிங்கப்பூர் அதிகாரிகள் இன்று (நவம்பர் 8) மீட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் புறப்பட்டு, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அக்கப்பல் நேற்று (நவம்பர் 7) பழுதடைந்தது.

இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. நடுக்கடலில் தத்தளிக்கும் தங்களை மீட்குமாறு அதில் இருந்தவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். குறிப்பாக அதில் பயணித்த ஒருவர், சமூக வலைதளம் மூலம் உதவியை நாடியிருந்தார். அதில் அவர், “பிலிப்பைன்ஸ் கடலில் 317 அகதிகளுடன் பயணித்த கப்பலொன்று மூழ்கும் அபாயத்தில் உள்ளது. இதில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் எனப் பலர் உள்ளனர். நாங்கள் பிலிப்பைன்ஸிற்கும், வியட்நாமிற்கும் இடையில் நிற்கின்றோம். எங்கள் உயிர்களைக் காப்பாற்றி விடுங்கள்” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். இந்த கப்பலை மீட்க உதவி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நடுக்கடலில் மூழ்கும் தறுவாயில் இருந்த அந்தக் கப்பலை, சிங்கப்பூர் அதிகாரிகள் இன்று (நவம்பர் 8) மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சிங்கப்பூரை அண்மித்த கடலில் பயணித்த மற்றுமொரு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாமக நிறுவனவர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடாவில் தஞ்சம் அடைய 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசின் இந்த உதவி பாராட்டத்தக்கது.

srilankan tamil refugees ship commented in ramadoss

முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.

அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர்; இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது: அண்ணாமலை

இமாச்சல் தேர்தல்: பாஜகவில் காங்கிரஸ் தலைவர்கள் திடீர் ஐக்கியம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.