தொடரும் மக்கள் போராட்டங்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று (ஜூலை 12) கொழும்பை விட்டு ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து இன்று சிங்கப்பூருக்கு அடைக்கலமாக செல்ல இருக்கிறார்.
கோத்தபய நாட்டை விட்டு ஓடிய கோபத்தில் மக்கள் போராட்டம் நேற்று மாலை முதல் தீவிரமாகியது. இந்த நிலையில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.02 க்குள் கோத்தபய ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக் காரர்கள் கெடு விதித்திருந்தனர்.அந்த நேரம் முடிந்த சில நிமிடங்களில், கொழும்பில் இருக்கும் அரசுத் தொலைக்காட்சி அலுவலகமான ரூபவாஹினி வளாகத்துக்குள் போராட்டக் காரர்கள் நுழைந்தனர்.
அதுவரை அரசு சார்பான செய்திகளை மட்டுமே ரூபவாஹினி ஒளிபரப்பிக் கொண்டிருந்த நிலையில் திடீரென நிகழ்ச்சித் தொகுப்பாளர், ‘நமது அரங்கத்துக்கு இரு போராட்டக் காரர்கள் வந்திருக்கிறார்கள்’ என்று அறிமுகப்படுத்தினார். அதன் பின் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அப்போது ரூபவாஹினி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போராட்டக் காரர் ஒருவர், “நாங்கள் ரூபவாஹினி மீது கல் எறியவில்லை. யாரையும் தாக்க வரவில்லை. அரசு ஊடகத்தில் பணிபுரியும் நீங்களும் எங்கள் நண்பர்கள்தான். அரசாங்கத்தின் பக்கம் நிற்காமல், மக்களுடன் இணைந்து எங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு உதவிய ரூபவாஹினி ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார் அந்த போராட்டக் காரர்.
அந்த நேரத்தில்தான் கோத்தபய ராஜினாமா செய்துவிட்டார் என்றும், இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் செயல்படுவார் என்றும் அறிவிப்பு வர போராட்டக்காரர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் ரூபவாஹி வளாகத்துக்குள் திரள ஆரம்பித்தார்கள்.அந்த கட்டிடம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து இலங்கை அரசு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தியது. சில மணி நேரங்களில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், இலங்கை அரசு தொலைக்காட்சி, வானொலியை ராணுவம் கைப்பற்றிவிட்டது.
–வேந்தன்