Sri Lankan Presidential Election: How will the Preferential Vote count be conducted?

இலங்கை அதிபர் தேர்தல் : விருப்ப வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?

அரசியல் இந்தியா

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் 50 சதவீத வாக்கு பெறாததால், இரண்டாவது வாக்கு எண்ணிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் நாட்டின் 2.2 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் மொத்தம் 76 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகியுள்ளது.

அதிபர் வேட்பாளராக தற்போதையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவரை தவிர இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச சமகி ஜன பலவேகய கட்சி சார்பிலும், அநுர குமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி சார்பிலும், நமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பிலும்,  ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக அரியநேந்திரனும் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் நேற்று இரவு முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க முற்பகல் நிலவரம் வரை பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். எனினும் அதன்பின்னர் அவரது முன்னிலை படிபடியாக குறைந்தது.

இறுதியாக அனுர குமார திசநாயக்க 39.45% வாக்குகள் பெற்று முதலிடமும், சஜித் பிரேமதாச 34.32% வாக்கு சதவிகிதத்துடன் இரண்டாவது இடமும், ரணில் விக்ரமசிங்கே 17.25% வாக்கு சதவிகிதத்துடன் மூன்றாவது இடமும் பெற்றனர்.

இலங்கையில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

ஆனால் 1982 ஆண்டு முதல் நடைபெற்று வரும் இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தற்போதைய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே பெரும்பான்மையை பெறவில்லை. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது வாக்கு எண்ணிக்கை எனப்படும் வாக்காளர்களின் விருப்ப வாக்குகள் எண்ணப்படுகின்றன.

விருப்ப வாக்கு என்றால் என்ன?

இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை, வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களித்தால், அவரது பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும்.

இல்லையெனில், மிகவும் விருப்பமான வேட்பாளரின் பெயருடன் ஒன்று(1) என்ற எண்ணை குறிக்க வேண்டும். அதே போன்று, வாக்காளர்கள் அடுத்த இரண்டு வேட்பாளர்களின் பெயருக்கு அருகில்,’2’ , ‘3’ என தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறினால், வெற்றி பெற்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது.

அதன்படி தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ள அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு வேட்பாளர்கள் விருப்ப வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மற்றவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதில் யார் அதிக விருப்ப வாக்குகளுடன் முன்னிலை பெறுகிறாரோ, அவர் அதிபர் தேர்தலின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

தற்போதை விருப்ப வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அநுர குமார திஸநாயக்க 42.48% வாக்குகளுடன் முன்னிலையில் தொடர்ந்தாலும்,  சஜித் பிரேமதாச 35.04% வாக்குகளுடன் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நந்தன்: விமர்சனம்!

இலங்கை அதிபர் தேர்தல்: முதல்முறையாக நடைபெறும் விருப்ப வாக்கு எண்ணிக்கை!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0