இலங்கை அதிபர் தேர்தலில் முதல்முறையாக யாரும் 50% மேல் வாக்குகள் பெறாததால், இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இலங்கையில் அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையானது தற்போது நடைபெற்று வருகிறது.
தொடக்கல் முதலே தேசிய மக்கள் சக்தி முன்னணி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். தொடக்கத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு சதவிகிதம் பெற்றிருந்த அனுர குமார திசநாயக்கவின் வாக்கு சதவிகிதம் படிப்படியாக குறைந்தது.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், அனுர குமார திசநாயக்க 39.45% வாக்குகள் பெற்று முதலிடத்திலும், அவரை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 34.32% வாக்கு சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 17.47% வாக்கு சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இலங்கை தேர்தல் விதிப்படி, ஒருவர் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற வேண்டும். ஒருவேளை 50% மேல் வாக்குகளைப் பெறவில்லை என்றால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.
அதன்படி முதல் இரண்டு இடங்களில் உள்ள அனுர குமார திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருக்கும் வாக்காளர்கள் அளித்த இரண்டாவது விருப்ப வாக்குகள் மட்டும் எண்ணப்படும். மற்ற வேட்பாளர்கள் எலிமினேட் செய்யப்படுகிறார்கள் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்று உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Ind Vs Ban டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்… இந்தியா அபார வெற்றி!