தமிழர்கள் பகுதியிலும் வென்ற அதிபர் A.K.D… இனி இலங்கை எப்படி இருக்கும்? – எச்சரிக்கும் வைகோ

Published On:

| By Selvam

இலங்கையில் அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி பெற்று குட்டித் தீவை உலகம் முழுவதும் உற்றுநோக்க வைத்துள்ளார் அதிபர் அனுர குமாரதிசாநாயக்க.  2020 தேர்தலில் வெறும் மூன்று சீட்டுகளில் வெற்றி பெற்றவர்,   இப்போது 159 சீட்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அதிகமான வரிச்சுமை, உச்சம் தொட்ட விலைவாசி, பண மதிப்பு வீழ்ச்சியால் இலங்கை நாடு தவித்தது.

ஒருகட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த மக்கள் அப்போது ஆட்சியில் இருந்த கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டுக்கு தப்பியோடியது.

போராட்டத்தில் குதித்த ஏ.கே.டி!

இந்த காலகட்டத்தில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி) கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மக்களின் குரலாக வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தார்.

இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக அறியப்பட்டார் திசாநாயக்க. இளைஞர்கள் இவருக்கு வைத்த பெயர் ஏகேடி. இவர் போராட்டங்களுக்கோ, பிரச்சாரங்களுக்கோ செல்லும் போது ஏகேடி… ஏகேடி என்று தொண்டர்கள் கோஷமிட தொடங்கினர்.

இந்த சூழலில் தான் இலங்கையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) கூட்டணி அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அதிபர் தேர்தலில் வெற்றி!

ஒருபக்கம் அதிபர் தேர்தலில் சுயேட்சையாக ரணில் விக்ரமசிங்கே களமிறங்கினார். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சி தரப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே என கடும் போட்டி நிலவியது.

இவர்கள் அனைவரையும் தேர்தலில் தோற்கடித்து முதல்முறையாக இலங்கையில் இடதுசாரி கட்சியை சேர்ந்த திசாநாயக்க வெற்றி வாகை சூடி, செப்டம்பர் 24-ஆம் தேதி அதிபராக பதவிவேற்றார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் எண்ணிக்கையோ வெறும் 3 மட்டுமே. எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் மட்டுமே அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த முடிவை எடுத்தார் திசாநாயக்க.  பதவியேற்ற முதல் நாளே தனது அதிகாரத்தைப் படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கை நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை மொத்தம் 225 உறுப்பினர் பதவிகள் இருக்கிறது. இதில் 196 உறுப்பினர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 29 உறுப்பினர்கள் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 225 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 அன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் 68.93% வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மதியத்திற்குள் பெரும்பான்மைக்கு தேவையான 133 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது தேசிய மக்கள் சக்தி கூட்டணி.

தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஏ.கே.டி

தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் மாகாணத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல வன்னி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் என்.பி.பி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் திசாநாயக்க குறைவான வாக்குகளே பெற்றிருந்தார்.  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்தின் கரங்களே இப்பகுதிகளில் ஓங்கியிருந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் அப்படியே  மாறியுள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள கட்சி ஒன்று அதிக இடங்களில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

கடந்த நவம்பர் 10-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திசாநாயக்க, ”இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் சமமாக உணரும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியேற்போம்.

நமது நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் இந்த முயற்சியில் என்னுடன் இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாண மக்களாகிய உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

 

30 வருட கால யுத்தத்திற்குப் பிறகு, இங்கு கண்ணீர், இழப்பு, அழிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இது போன்ற ஒரு போர் இனி ஏற்படாது என்பதை உறுதியாக சொல்கிறேன். பல்வேறு சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்து, இது உங்கள் அரசாங்கம் என்று நீங்கள் உணரும் வரை கடுமையாக உழைப்பேன்.

யாழ்ப்பாணத்தில் புதிய தொழில்களை தொடங்கவும், வேலைகளை உருவாக்கவும், போதைப்பொருள் பிரச்சனை முழுமையாக அகற்றப்படும். தற்போது அரசு வசம் உள்ள தமிழர்களின் நிலங்கள் மீண்டும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படும்” என்று உணர்ச்சி பொங்க பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தேர்தல் முடிவுகளும் அவரது பேச்சுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான தனபாலசிங்கம் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக அரசியல் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உணர்ச்சிமிக்க தேசியவாத முழக்கங்களை மட்டுமே முன்வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

திசாநாயக்காவை விமர்சிக்கும் வைகோ

இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் திசாநாயக்க வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இலங்கையில் தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள். 1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13 ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது என்றும் சிங்கள இனவெறியினுடைய கருத்தாக தொடர்ந்து கூறிவந்தவர் திசாநாயக்க.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் அவர்தான்.

சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது, தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூச்சலிட்டவர்தான் திசாநாயக்க

இதற்கு முந்தைய அதிபர்கள் தமிழர்களுக்கு எதிராக கொடும் குற்றங்களை செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய அதிபர். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர அவர் முற்படுவார்” என்று விமர்சித்துள்ளார்.

.இலங்கையை மீட்டெடுப்பாரா ஏ.கே.டி

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசியலில் கோலோச்சிய ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன முன்னணி கட்சி வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் துடைத்தெறியப்பட்டிருக்கிறது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாற்பது இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. முன்னால் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் ஜனநாயக முன்னணி கூட்டணி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 

இலங்கையின் அரசியல் தலைகள் என்று உலக நாடுகளில் உள்ள பார்க்கப்பட்ட அனைவரையும்  திசாநாயக்க தனது வெற்றியின் மூலமாக ஓரம்கட்டியுள்ளார்.

கடும் பொருளாதார சிக்கலில் தவித்துவரும் இலங்கையை மீட்டெடுப்பாரா? தமிழர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? அல்லது தமிழர்களுக்கு எதிரான பழைய நாயகாவாகவே தொடர்வாரா?  இலங்கை தமிழர்கள் இடையே  மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோகன் லால் இயக்கும் ‘பரோஸ்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘அரியலூர் அரிமா’… அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel