தெ.சீ.சு.மணி
26-07-22 சென்னையில், “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் ( International Association for Tamil Research)!” செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அதில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், வி.ஜி.பி. சந்தோசம், பேரா.பொன்னவைக்கோ, பேரா. சுந்தரமூர்த்தி, சிங்கப்பூர் மணியம், உலக நாயகி பழனி, விஜய்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
1966ல், மலேசியாவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. யாழ்ப்பாணத்தைச் சேரந்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முன்முயற்சியில் அது நடத்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை 10 மாநாடுகள் நடத்தப்பட்டன. 10ஆவது மாநாடு அமெரிக்காவில் சிக்காக்கோவில் நடந்துள்ளது. அதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய கனமான மலரை வெளியிட்டார்கள். இப்போது 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிங்கப்பூரில் சிம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023 மே மாதம் 26,27,28 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. இதுதான் ஊடகவியலாளர் சந்திப்பின் சாரம்.
அதில், வி.ஐ.டி. வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், சிங்கப்பூர் நாடு மட்டும்தான் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக வைத்துள்ளது என்றார். தமிழ் விழாக்களை நடத்த சிங்கப்பூர் அரசு உதவி செய்கிறது. தமிழ்நாட்டில் கூட அந்த நிலை இல்லை என்றார். பர்மாவில் 7 லட்சம் தமிழர்கள் இருந்தும் ஒரு தமிழ்ப் பள்ளி கூட இல்லை என்றார். தமிழ் உட்பட 26 திராவிட மொழிகள் உள்ளன என்றும், அதில் 25 மொழிகள் இந்தியாவிலும், ஒரு மொழி பாகிஸ்தானிலும் இருக்கிறது என்றார். 1981 ல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ” இன்டஸ் வேலி சிவிலிசேசன் ( சிந்து சமவெளி நாகரீகம்)” என்ற நூலில், ரிக்வேதத்தில், ஆரியம், இந்தியாவை பழுதாக்கியது” என எழுதப்பட்டுள்ளதையும் கோ.வி. சுட்டிக் காட்டினார்.
கோ.விசுவநாதனைப் பற்றிக் கூறும் போது, அவர் மறைமலை அடிகளார் 1916 ல் துவக்கிய “தமிழியக்கம்” அமைப்பை துவக்கி, உலகமெங்கும் தமிழ் மணக்கச் செய்கிறார் என்று பாராட்டினார்கள். அப்போது அந்த செய்தியாளர் சந்திப்பிலேயே ஒரு கேள்வி எழுந்தது. 1970 ன் காலங்களிலும், 1980 ன் காலங்களிலும், மாநிலக்கல்லூரி பேராசிரியர் மறைந்த அய்யா இளவரசு ” தமிழியக்கம்” அமைப்பை நடத்தினாரே, அதன் சென்னை மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தமிழ் அறிஞர், செயற்பாட்டாளர் மறைந்த பேரா. அரணமுறுவல், ” தமிழியக்கம்” என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டாரே! அந்த இதழில், “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை” வெளிவந்ததே, அவர்களை இன்றைய கோ.விசுவநாதன் தலைமையிலான “தமிழியக்கம்” அங்கீகரித்து முன்செல்வது தானே முறை? என்ற கேள்வி எழும்பியது. அதற்கு கோ.வி.” பேராசிரியர் இளவரசு எனது நெருங்கிய நண்பர்” என்றார். இருவரும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகக் கற்றார்கள் என்கிறார், பேராசிரியர் திருமாவளவன். அவரிடம் நாம் வினவியதற்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழிவந்த பேரா.திருமாவளவன்,
“புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்,” தமிழ்நாட்டில், தமிழ் தெருக்களில் தமிழ்தான் இல்லை என்று கூறி, தமிழை பரப்புவதற்காக, “தமிழியக்கம்”என்ற 120 கவிதைகளை எழுதி சிறுநூலாக வெளியிட்டதை நினைவு கூர்ந்தார். அதன் தொடரச்சியாகத்தான், பேரா. இளவரசு ” தமிழியக்கம்” என்று செயல்பட்டார் என்கிறார், அன்றைய தமிழியக்கம் அமைப்பில் செயல்பட்ட பேரா. திருமாவளவன். அன்றைய காலத்தில் தலைமறைவுப் புரட்சிகர இயக்கத்தில் தொழில்முறைப் புரட்சியாளனாகப் பணியாற்றி வந்த நானும், மறைந்த தோழர் அரணமுறுவல் உடன் ” தமிழியக்கம்” பணிகளில் ஈடுபட்டு வந்தேன்
மேலும் செய்தியாளர் சந்திப்பில் , தமிழிசை பற்றி, அதன் ஐந்து திணைகளை அடிப்படையாகக் கொண்ட தன்மையை வைத்து முதன்முதலாக ” தமிழிசை அகராதி ” என்று ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளின் ” இசைக்கு அகராதி” இருப்பதுபோல், இரண்டு பாகங்களை உருவாக்கியுள்ள தென்காசி மாவட்ட நன்னகரத்தைச் சேர்ந்த மம்மது சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டு, 11 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிறப்பு செய்யப்பட வேண்டுமில்லையா? என்ற கேள்வியும் எழுந்தது.
எல்லாவற்றிற்கும் உச்சமாக வேந்தர் கோ.விசுவநாதன் பேசும் போது, சுட்டிக்காட்டிய தமிழ் எழுத்துப் பிழைகள், அங்கேயே வைக்கப்பட்டிருந்த, ” உலகத்தமிழ் ஆராய்ச்சி் மன்றம்” என்ற அவர்களது பதாகையிலேயே எழுத்துப் பிழையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, நமது தமிழ் செய்தித்தாள்களில், தமிழ் எழுத்திலேயே ” பிழை” செய்கின்றனர் என்பதை கோ.வி. சுட்டிக் காட்டினார். சீத்தலைச் சாத்தனார், தமிழில் எழுதுவோர் செய்யும் எழுத்துப் பிழைகளைக் காணும்போது எழுத்தாணியால் தலையில் குத்திக் கொண்டதையும் எடுத்துச் சொன்னார். அதேசமயம், ஊடக சந்திப்பு கூட்ட ஏற்பாட்டாளர்கள் தங்கள் பதாகையிலேயே,” ஆராய்ச்சி” என்பதை ” ஆராச்சி” என்று பிழையாக எழுதியிருந்ததும் அங்கேயே விவாதிக்கப்பட்டுவிட்டது.