மேட்டூர் அணை திறப்பு: தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துங்கள் – ராமதாஸ்

அரசியல்

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நீர்நிலைகளையும், வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரும் பணிகள் வேகம் குறைவாக நடைபெற்று வருவது உழவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் தேவையான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, வழக்கமான நாளான ஜூன் 12ஆம் தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணை மூடப்பட்டதிலிருந்தே மேட்டூர் அணையில் 100 அடிக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்து வருகிறது.

அதனால், நடப்பாண்டிலும் ஜூன் 12ஆம் நாள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பது மூன்று மாதங்களுக்கு முன்பே உறுதியாகி விட்டது.

அத்தகைய சூழலில் மேட்டூர் அணை மூடப்பட்டவுடன், கடந்த பிப்ரவரி மாதமே காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உழவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அதை ஏற்காமல் மிகவும் தாமதமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டால், 15ஆம் நாள் கல்லணைக்கு தண்ணீர் வந்து விடும். கல்லணையிலிருந்து ஜூன் 15 அல்லது 16ஆம் நாள் காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படக் கூடும்.

அதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், பெரும்பான்மையான பகுதிகளில் இன்னும் பாதியளவு பணிகள் கூட நிறைவடையவில்லை. இதே வேகத்தில் பணிகள் நடைபெற்றால், கல்லணை திறப்பதற்கு முன்பாக தூர்வாரும் பணிகள் நிறைவடையாது.

குறிப்பாக தொலைதூரப் பகுதிகளுக்குத் தண்ணீரை கொண்டு செல்லும் சி மற்றும் டி கால்வாய்களில் தண்ணீர் ஏறாது. அதனால், தொலைதூரப் பகுதிகளுக்கும், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடைவது தாமதமாகும். அது குறுவை சாகுபடியை பாதிக்கும்.

மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏறக்குறைய 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

நடப்பாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.75 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.25 லட்சம் ஏக்கர், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என நான்கு மாவட்டங்களில் மட்டும் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சரியான நேரத்தில் தொலைதூர பாசனப் பகுதிகளுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் இப்போதே 50,000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி தொடங்கப்பட்டு விட்டது.

ஆனால், சரியான நேரத்தில் தூர்வாரும் பணிகள் நிறைவடையவில்லை என்றால் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யும் திட்டம் கருகி விடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த சிக்கலில் நீர்வளத்துறை அமைச்சர் தலையிட்டு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இதற்காக காவிரி படுகையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமைப் பொறியாளர் நிலையிலான அதிகாரி ஒருவரை அனுப்பி, அடுத்த ஒரு வாரத்திற்குள் தூர்வாரும் பணிகள் நிறைவடைவதை நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தான் குறுவை சாகுபடி இலக்கை எட்ட முடியும்.

மற்றொருபுறம், காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்துறை மூலம் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் உழவர்களுக்கு குறுகிய கால கடன்கள் தடையின்றி கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் குறுவை சாகுபடி உழவர்களுக்கு இலாபமாக அமைவது உறுதி செய்யப்பட வேண்டும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலையை அமைக்கும் ஓம்ரான்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: அதிகரிக்கும் ஆதரவு!

Speed up dredging work in Cauvery
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *