அம்பேத்கர் குறித்து அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (டிசம்பர் 19) போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு கடும் விமர்சனங்களை எழுப்பியது.
“அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்” என முழக்கமிடுவது இப்போது ஒரு “ஃபாஷன்” ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று அமித் ஷா கூறியிருந்தார்.
இந்த பேச்சால் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியபோதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அமித் ஷாவுக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19.12.2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று அமித் ஷாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் அறிவித்துள்ள காங்கிரஸ், அமித் ஷா பதவி விலகக் கோரி மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி!