காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும் நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இருவரும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றவர் யாரென்ற முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வந்தாலும், நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “படித்தவர் என்பதாலும், மொழிகளில் புலமை பெற்றதாலும் சசிதரூருக்கு ஆதரவு அளித்துள்ளேன்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற தேர்தலை முழுமையாக ஆதரிக்கிறேன். இரண்டு தகுதிமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
கட்சியின் பிரதிநிதிகள் ஒருவரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இது கட்சிக்கு அதிக அளவிலே பலம் சேர்க்கும்.
நேரு குடும்பத்திலிருந்து அவர்கள் நேரடியாக போட்டியிடாவிட்டாலும் மானசீக தலைவர்களாக எல்லா காலக்கட்டத்திலும் அவர்கள் தான் இருப்பார்கள்.
யார் தலைவராக வந்தாலும் அவர்களுடைய வழிநடத்துதல், அவர்களுடைய ஒப்புதல், அவர்களுடைய ஆதரவோடுதான் செயல்படப் போகிறார்கள். யாராவது ஒருவருக்கு ஆதரவு தெரிவித்துதான் ஆக வேண்டும்.
நான் சசிதரூரை ஆதரிப்பதற்கு காரணம், அவர் படித்தவர். பேச்சாற்றல் மிக்கவர், எழுத்தாற்றல் மிக்கவர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக பேசக்கூடியவர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.
அதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு காங்கிரசுக்கு மக்களை ஈர்க்கக்கூடியவர் தலைமையேற்றால் அது கட்சிக்கு வலிமை சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். அதற்காகத்தான் என்னுடைய முழு ஆதரவை சசிதரூருக்கு தெரிவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
ராஜ்
காங்கிரஸ் தேர்தலில் 90% வாக்குப்பதிவு!
அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் போட்ட கன்டிஷன்!