பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஐக்கிய ஜனதா தளம் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைத்தார் பிரதமர் மோடி.
அப்போதே பிகாருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வந்தன.
இந்தநிலையில் இன்று (ஜூன் 29) டெல்லியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது.
இதில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டார். இவர் அக்கட்சியின் மாநிலங்களவை குழு தலைவராகவும் உள்ளார்.
இதைத்தொடர்ந்து சஞ்சய் ஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கோருவது புதிதல்ல. இது பிகாரின் வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்துவதற்கும் மாநிலத்தின் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும்.
2025-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் போதிலும் நிதிஷ்குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. மக்களவைத் தேர்தல் வெற்றி அதை காட்டுகிறது” என்றார்.
‘14-வது நிதிக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு சிறப்பு அந்தஸ்து என்ற பிரிவு நீங்குகிறது’ என்று மத்திய பாஜக அரசு தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், நிதிஷ் குமார் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று ஜேடியு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதே தீர்மானத்தை மாநில அமைச்சரவையில் நிறைவேற்ற நிதிஷ் குமாருக்கு தைரியம் உண்டா? அதற்கான தைரியத்தை முதல்வர் வரவழைப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “தெலுங்கு தேசம் கட்சியின் புதிய இன்னிங்ஸ் என்ன. அவர்கள் ஏன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்னும் தீர்மானம் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். ஏப்ரல் 30, 2014 அன்று, உயிரியியல் ரீதியாக பிறக்காத பிரதமர் மோடி திருப்பதியில் வைத்து இதுதொடர்பாக உறுதியளித்தாரே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடி அரசுக்கு நிதிஷ் குமார் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதாகவும், மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்