நாம் அறிவிக்கும் அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயனடைந்தால் 8கோடி மக்களும் பாராட்டும் அரசாக நமது அரசு அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று(பிப்ரவரி 9) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஸ்டாலின், “சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் எனக்கு மனநிறைவை அளித்துள்ளது என்பதை உங்களிடம் வெளிப்படையாகவே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதை நோக்கமாக கொண்டே இன்றைக்கு நாம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக பெரும்தொய்வு ஏற்பட்டிருந்தது.
அந்த தொய்வை நீக்குவது மட்டுமல்ல, உயர்வை மேம்படுத்த நமக்கு இலக்குகள் இருந்தது. அந்த இலக்கில் முன்னோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
கடந்த 20மாதங்களில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை மொத்தமாக பார்த்தாலே நீங்கள் தெளிவாக அறியலாம். இவையனைத்தையும் அறிவித்தது சாதனை அல்ல. அந்த அறிவிப்புகள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிப்பதில் தான் இதன் மொத்த வெற்றியும் அடங்கி இருக்கிறது.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து என்ற ஒரேஒரு திட்டத்தின் மூலமாக தினமும் லட்சக்கணக்கான மகளிரின் பாராட்டுக்களை இந்த அரசு பெற்றுவருகிறது. தினமும் காலை சிற்றுண்டி வழங்குவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நம்மை வாழ்த்திக்கொண்டிருக்கின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் கோடிக்குமேல் பயனடைந்துள்ளார்கள்.
இதேபோல் அனைத்து திட்டங்களாலும் மக்கள் பயனடைந்தால் 8கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு அமையும். இது உங்களுடைய கையில்தான் இருக்கிறது. அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் எப்படி செயல்படுத்தப்படுகிறது.
அதில் சுணக்கமோ முடக்கமோ இருக்கிறது என்றால் எதனால்? அந்த திட்டத்தை முழுமையாக முடிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதனை துறையினுடைய செயலாளர்கள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நாடாளுமன்ற உரை: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!
கட்டம் கட்டப்பட்ட அமைச்சர் நாசர் மகன்: ஸ்டாலின் வீசிய முதல் சாட்டை!