வைஃபை ஆன் செய்ததும் இன்று தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தின் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்கனவே நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 சட்ட மசோதாக்களை கடந்த நவம்பர் 13ஆம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு வருகிற நவம்பர் 20 விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்பாக ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
உடனடியாக இதுகுறித்து அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய அந்த பத்து சட்ட மசோதாக்களையும் மீண்டும் அவையில் வைத்து நிறைவேற்றி இன்றே அதாவது நவம்பர் 18ஆம் தேதியே அது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக சட்டமன்ற மசோதாக்களின் மீது முடிவெடுக்க காலதாமதம் செய்கிறார் என்ற வழக்கு 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது… நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கு ஏதுவாக தான் பத்து மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர். ஆனால் அதே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆளுநருக்கு அடுத்த கட்ட நெருக்கடியை தரும் வகையில் உடனடியாக மீண்டும் அவை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழுமையாக ஆதரித்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளுநரை பற்றி நிதானம் இல்லாமல் சட்டமன்றத்தில் பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டி இந்த மசோதாக்களை ஆதரிக்க முடியாது என்று சொல்லி வெளிநடப்பு செய்து விட்டது. பாரதிய ஜனதா கட்சி இந்த சட்டமன்ற கூட்டத்தில் வெளிநடப்பு செய்யும் என்பது ஏற்கனவே திமுக எதிர்பார்த்ததுதான்.
ஆனால் திமுக எதிர்பாராத வகையில் இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுகவும் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் இந்த அவசரக் கூட்டம் ஏன்?, ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளில் வித் ஹோல்ட் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தமாகுமா என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்டார். அவற்றுக்கு சட்ட அமைச்சர் நிதி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உரிய பதில்களை அளித்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இன்றுவரையில் நிலுவையில் இருக்கக்கூடிய தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தை குறிப்பிட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார் எடப்பாடி. இது பற்றி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என சட்டமன்றத்திலேயே அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
திமுகவினரோ, ‘நாங்கள் ஆளுநர் ரவிக்கு எதிராக இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டம் என்ற வலையை விரித்தோம். ஆனால் இதில் நாங்களே எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிச்சாமியும் தானாகவே வந்து விழுந்து விட்டார்’ என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. அதிலிருந்து இந்த இரு கட்சிகள் இடையேயும் மறைமுக கூட்டணி தொடர்வதாகவும் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பதாகவும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வந்தார் . ஆனால் இதை எடப்பாடி தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்றைய சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநரை வெளிப்படையாக எதிர்ப்பதைத் தவிர்த்து வெளிநடப்பு செய்துவிட்டார் எடப்பாடி. இதன்மூலம் அதிமுக ஆளுநரை எதிர்க்க தயங்குகிறது என்பது தெளிவாகிவிட்டது என்கிறார்கள் திமுகவினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியபடி அதிமுக பாஜக இடையிலான கூட்டணி வெளியே தான் உடைந்திருக்கிறதே தவிர உள்ளே உடையவில்லை. அதற்கான சாட்சி தான் இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டம். ஆளுநரை எதிர்ப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை. அதனால் தான் இந்த சிறப்பு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இதை திமுகவினர் தொடர்ந்து ஊடகங்களில் எடுத்து வைத்து அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரம் அதிமுக தரப்பில் இது குறித்து கேட்டபோது, ‘முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவியுடன் மோதி தனது இமேஜை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்திருக்கிறார். அதற்காகவே இந்த சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் நாங்கள் ஏன் போய் சிக்கிக் கொள்ள வேண்டும்? ஆளுநருக்கு ஆதரவாக அதிமுக இல்லை. ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்தால் ஆளுநருக்கு ஆதரவு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. எடப்பாடியின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிமுக-பாஜக கூட்டணி என்ற பழைய சேற்றையே மீண்டும் கிளறிக் கொண்டிருக்கிறார்கள் திமுகவினர்’ என்கிறார்கள்.
ஆனபோதும் ஆளுநருக்கு விரித்த வலையில், எடப்பாடி விழுந்ததை அரசியல் ரீதியாக தீவிரமாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது திமுக” என்றெ மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
மத்தியப் பிரதேசத்தின் 76% வாக்குப் பதிவு: யாருக்கு லாபம்?
அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜி: உச்ச நீதிமன்றத்தில் மனு!