சிறப்புக் கட்டுரை: நாட்டுக் கோழி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

முரளி சண்முகவேலன்

முழித்தபோது தலை கனத்திருந்தது. எனது சட்டைப் பை கிழிந்திருந்தது. சட்டையின் இடது பக்கத்தில் சிவப்பான கறை வழிந்திருந்தது: ரத்தம். எனது பையிலிருந்த வாலெட்டைக் காணோம். அதனுள் ரூபாய்கள், கொஞ்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள், வங்கி அட்டைகள், எனது குழந்தைகளின் படங்கள் எல்லாம் இருந்தன.

இடது கண்ணில் உள்ள மேல் இமைக்கு அப்பால் தொங்கிக்கொண்டிருந்த எனது கேசம் ரத்தத்தில் நனைந்து அது என் நெற்றியை உரசியபோது குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் இடது கண்ணைச் சுருக்கும் போது சுர்ரென வலித்தது. கிழிந்த சட்டைப் பையின் மேல் வரைபடத்தில் உள்ள ஆறு போல நெளிந்த ரத்தக் கறையைப் பார்க்கையில் குழப்பமாக இருந்தது.

எனது வலது கை விரல்களில் சுற்றி இருந்த பையில் நாட்டுக் கோழி முழித்திருந்தது. க்கக். க்கக்.. என்று கோழிச் சத்தம். பரவாயில்லை. எல்லாம் போய்விடவில்லை. தீடீரெனெ, சாப்பாட்டுக்கு வாங்கிய நாட்டுக் கோழியின் மீது புதிதாய் கழிவிரக்கம் வந்தது. ஆனால், குழம்பின் மணத்தை நினைக்கையில் அது எனது கழிவிரக்கத்தைக் குழப்பியது.

“சார், இந்தாளு முழிச்சிட்டாரு..”

தரையில் போடப்பட்ட ஒரு பலகையில் நான் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பலகை நான் படித்த காக்காத் தோப்புப் பள்ளிக்கூடத்தை ஏனோ நினைவுபடுத்துகிறது.

ஒரு காவலர் என்னை நோக்கி நடந்து வருகிறார். “ஹலோ, டீ குடிக்கிறீங்களா. சூடா குடிங்க.” காவல் நிலையத்தில் இருப்பது ஊர்ஜிதமாக உறைத்தது. பலர் நின்று கொண்டிருக்க, சிலர் நாற்காலியில் அமர்ந்திருக்க, நான் மட்டுமே தரையில் கிடத்தப்பட்ட ஒரு பலகையின் மீது நடுவில் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிராக, அறைக்கு வெளியே, ஒரு பத்து பேர் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“டீக்கு நன்றி.”

“அதெல்லாம் இருக்கட்டும், மொதல்ல டீ குடிங்க…” என்றார் ஒரு போலீஸ். சற்றே அசூயையுடன் டீ கிளாசை வாங்கிக் கொண்டேன். எனது லினன் சட்டையில் உள்ள ரத்தக்கறையை என்ன மாதிரி சலவை போக்கும் என ஒரு வினோதமான கேள்வி மனதில் எழுந்தது.

மீண்டும் நான் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் உற்றுக் கவனித்தபோது அறைக்கு வெளியே, நிறைய பேர் நின்று கொண்டிருந்ததும் அவர்கள் என்னைப் பார்த்து முறைத்து தங்களுக்குள் பேசிக் கொள்வதும் புரிந்தது; ஆனால் முழுதும் விளங்கவில்லை. நீண்ட மஞ்சள் மற்றும் காவி நிறக் கொடிகள் அவர்கள் கையில் இருந்தன. போலீசார் அவர்களை தடுத்து சமரசம் பேசிக் கொண்டிருந்தனர்.

நான் காவல் நிலையம் வரக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மண்டை வலிக்கிறது. நாட்டுக் கோழி வாங்க வந்த இடத்தில் தடபுடலாக அடி வாங்கியது மட்டும் ஞாபகம் வருகிறது. எனக்கு ஒன்றும் புரியவில்லை: நாட்டுக் கோழி வாங்கியதற்கு எதற்கு அடி? மாட்டுக் கறி தானே இங்கே பிரச்சினை? ஒரு வேளை கோழியும் இந்துத்துவப் பிராணி ஆகிவிட்டதா? அப்படி ஒன்றும் செய்தி படித்ததாக நினைவில்லையே? நாட்டுக் கோழி வாங்கியதற்கு எதற்கு இந்த தர்ம அடி?

நான் உட்கார்ந்திருந்த பலகை மட்டமாக இல்லை: ஓரளவுக்கு நடுவில் உட்கார்ந்திருந்த நான், எனது இருப்பை அசைக்கும் போதெல்லாம் டடக்கு.. டடக்கு… என ‘மேலாக்க, கீழாக்க’ அந்தப் பலகை விளையாடிக் கொண்டிருந்தது. கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. வெளியில் சத்தம் அதிகமாக இருந்தது. பல பேர் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். நான் மட்டும் காவல் நிலையத்தில் தரையில் அமர்ந்திருப்பது அவமானமாக இருந்தது. எழ முயற்சி செய்த போது, ‘சார், அங்கதான உட்காருங்க’ என ஒரு காவலர் அதட்டியது எனது அவமான உணர்வை உறுதிப்படுத்தியது.

வெளியில் ஒருவர் பேசியது மட்டும் காதில் விழுந்தது. “நாங்கள் யாருக்கும் எதிரியில்ல. ஆனா இந்த மண்ணுக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு. அதை விலை பேசுற இந்த மாதிரியான தேவிடியா மகன்களிடம் இருந்து காப்பாத்த எதையும் செய்யத் தயங்க மாட்டோம்” என்று ஒருவர் உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொருவர் “வெளிநாட்டுல கொஞ்ச நாளு இருந்தா இங்க இருக்கிற கலாச்சாரம் எல்லாம் மறந்துருமா?”

அவர்களுக்கு என் வயதிருக்கும்.

**

நாட்டுக் கோழி போல் ஒரு கோழியும் கிடையாது என எனது துணைவியாரிடம் மார் தட்டி இருந்தேன். லண்டனில் கிடைக்கும் ஃப்ரீ ரேஞ்ச், ஆர்கனிக் சிக்கன்லாம் எங்க ஊரு நாட்டுக் கோழி முன் ஒன்னும் கிடையாது..கொஞ்சம் சதை குறைவாக இருக்கும் ஆனால், சுவையோ மிகுதி – என சொல்லிக் கொண்டே இருந்ததினால், மதுரை வந்த போது நாட்டுக் கோழி குழம்பு, வறுவல் எனது துணைவியாருக்கு தயார் செய்து படைத்து விடுவது என உறுதி பூண்டிருந்தேன். எனது தம்பியின் வீட்டில் இந்த நாட்டுக்கோழி பஜனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலையில் கரிமேடு மார்க்கெட்டில் நாட்டுக் கோழி வாங்க நுழைந்த போது, அதன் வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர் ‘ஒரு மாதிரி’ உன்னிப்பாக முறைத்துப் பார்த்து வழி விட்டார். நல்ல தடித்த விபூதிப்பட்டை, நடுவில் உருண்டையான குங்குமப் பொட்டு. படிய எண்ணைய் வழிய வாரியிருந்தார். சராசரி உயரத்துக்குக் குறைவு. கொஞ்சம் பழுப்பான வெள்ளை சட்டை, வேட்டி. அவர் விரல்கள் குட்டையாக, ஒவ்வொன்றும் இரண்டு இஞ்ச் இருந்தது. ஜெய்சங்கர் மீசை. தடித்த உதடுகள். மூச்சிவிடும் சத்தம் கேட்டது: டைப் 2 டயாபடீஸ் ஏனோ நினைவுக்கு வந்தது. அவர் முறைத்ததை (அ) உன்னிப்பாக கவனித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; ஏரியா அப்படி.

**

நான் உட்கார்ந்திருந்த பலகையைச் சுற்றி ஒரு விதமான துர்நாற்றம் படர்ந்திருந்தது. அனிச்சையாக எனது பேண்ட் பாக்கெட்டைத் தொட்ட போது எனது மொபைல் ஃபோன் இல்லை என்பதும் உறைக்க ஆரம்பித்தவுடன் – சிந்தனை அதன் மேலேயே இருந்தது. இதற்கு முன் ஒரு முறை பாங்காக்கில் தொலைத்தது நினைவுக்கு வந்தது. அந்த அனுபவத்தின் பலனாக, ‘போலீஸ் சர்ட்டிஃபிகேட் வாங்க வேண்டும்’ என்று மண்டையில் குறித்துக் கொண்டேன். ஒரு வேளை காவலர்களிடம் இருக்கலாம். கேட்க வேண்டும்.

பல காக்கிச் சட்டைகள் என் முன் தெரிந்தனர். எனக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு இளம் அதிகாரி நான் கண் விழித்ததை உணர்ந்தவாறு எதையோ எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி, “ஆர் யூ ஓகே?” என்று கேட்டார்.

பக்கத்தில் இருந்த காவலர், “சார், அந்தாளுக்கு தமிழ் தெரியும்.”

“அப்படியா…சரி. சரி. மத்தத நான் பாதுக்குறேன்.” இளம் அதிகாரி என்னை நோக்கி நடந்து வந்தார்.

“நாங்க வர்றதுக்குள்ள அடிச்சுட்டாங்க. மதுரையில எங்க இருக்கீங்க? உங்க பர்ஸ ரெகவர் பண்ணோம். லண்டனா? உள்ளூர் நிலைமை தெரியுமா தெரியாதா…”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என் மொபைல் ஃபோன்…?”

“ஃபோன் இல்லையே…. கேட்டோம். பர்ஸ் மட்டும்தான் கொடுத்தானுங்க. அதுலயும் உள்ள காசெதுவும் இல்ல..பட், பேங்க் கார்ட் இருக்கு..”

**

விடியற்காலையில் கரிமேடு மார்க்கெட்டுக்கு சென்று அங்கே கோழி விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் ‘நாட்டுக் கோழி கிடைக்குமா?’ என்று கேட்ட போது, என்னைப் பலரும் உற்றுப் பார்த்ததின் பொருள் புரியவில்லை. ஒருவர், “நாட்டுக் கோழியா…” என சத்தமாகச் சிரித்தார்.

அப்போது அங்கு ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் என்னை அவர் பக்கம் வருமாறு சைகை காட்ட, அவரை நோக்கி நடந்தேன். அவர் முன்னே நடையை எட்டிப் போட மார்க்கெட்டுக்கு உள்ளேயே இருக்கும் ஒரு சிறிய முட்டுச்சந்துக்குள் நுழைந்து என்னை திரும்பிப் பார்த்தார்; உள்ளே வருமாரு சைகை செய்தார்.

“என்ன இப்படி ஓப்பனா கேக்குறீங்க? ஒன்னுமே தெரியாதா? நாட்டுக் கோழிய ஒப்பனா விக்கிறது கிடையாது. நிறுத்தி ரெண்டு வாரமாச்சு. அரசாங்கம் தடை போடனேலானும், இவிய்ங்க கரச்சல் தாங்க முடியல.”

“…….!!???”

“தம்பி..நாட்டுக்கோழி என்ட்ட இருக்கு. ரெண்டாயிரத்து ஐநூறு ரூவா. ஒரே விலை. கொறைக்க முடியாது. ஏன்னா, ரிஸ்கு அவ்வளவு. சுத்தமும் செய்ய முடியாது. லோக்கல்ல கெடுபிடி அதிகம். நனைஞ்ச துண்டில அமுக்கி, வாயக் கட்டித் தர்றேன். கோழி கொஞ்சம் மயங்கி இருக்கும். பையில வச்சிக்கிங்க. மார்க்கெட்டுக்கு வெளியில் போனதும் இடது பக்கம் ஒரு சந்து வரும். அங்கே போனதும் முதலில் இருக்கும் கடை நம் ஆள் தான். பாய். அங்கே சுத்தம் செஞ்சுக்குங்க..”

நாட்டுக் கோழி பெரிதாக இருந்தது. காலைப் பிடித்துத் தூக்கிய போது மூன்று கிலோ இருக்கும் போல தெரிந்தது. முடி, குடல், கால், தலை நீக்கினால் எப்படியும் இரண்டு, இரண்டே கால் கிலோ தேறும் போல இருந்தது. நல்ல உருப்படி.

“சார், என்ன அழகா பாக்குறீங்க…டக்குன்னு வாங்கி உள்ளே வச்சிட்டு கெளம்புங்க..” ஏனிந்த ரகசியம் என்று கேட்ட போது, “மொதல்ல கிளம்புங்க சார்…” என்றார்.

பணம் கொடுத்த போது, கோழி விற்றவர் – நான் ஊருக்குப் புதிதா, என்னை இதற்கு முன் பார்த்தது இல்லையே என்று கேட்டார். ஆமாம், என்று சொல்லிவிட்டு பாய் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சொன்னபடி சந்தை நெருங்கியவுடன் மெலிந்த தேகமுள்ள, பளீரென வெற்றிலைச் சிரிப்புடன் பாய் தென்பட்டார். கோழியைச் சுத்தம் செய்து தர முடியுமா என்று கேட்டவுடன் சரி என்றார். பிறகு நாட்டுக் கோழி என்று தெரிந்தவுடன், சற்று தயங்கினார். அப்போது எனக்குப் பின்னால் சிலர் வேகமாக நடை போட்டு வருவதை சத்தம் மூலமாக உணர முடிந்தது. எனக்கு எதிராக நின்று கொண்டிருந்த பாய் அவர்களைப் பார்த்தவுடன், “போச்சு…பிரச்சினையாகும் முன்னே படக்குன்னு

கிளம்புங்க முதல்ல” என்று சொல்லிவிட்டு உடனடியாகஅந்த இடத்தைக் காலி செய்தார். நாட்டுக் கோழியை சுத்தப்படுத்துவதில் என்ன இவ்வளவு அரசியல் என்று யோசித்த போது, பின்னால் வந்த அந்தக் கும்பல் என்னை வழிமறித்தது. மார்க்கெட் வாசலில் பார்த்த திருவாளர் அதே முறைப்புடன் நிற்க அவர் பின் ஒரு ஐந்து பேர் நின்றுகொண்டிருந்தனர்.

“பையில நாட்டுக் கோழிதான?” என்று திருவாளர் கேட்க, ஆமாம் என்றேன்.

என் கையில் இருந்த நாட்டுக் கோழியை பிடுங்க முயற்சித்து ‘இவன் தேசத் துரோகி’ என அக்கும்பல் ஆர்ப்பரித்தது. பின்னால் இருந்த ஒருவர் “தமிழ் துரோகியும் கூடத்தான் மாமா. நாட்டுக் கோழியையும் வீர அடையாளமா நேத்து நம்ம தலைவரு உசிலம்பட்டியில அறிவிச்சிட்டாரு.”

ஒரு இருபத்து வயது சொச்ச இளைஞன் அவன் கையிலிருக்கும் ஒரு சிறு கத்தியினை என் இடது தோளின் மேல் வைத்து , “நாட்டுக் கோழிக் கறி கேக்குதோ.. போட்டா தெரியும்ல” என்றான். “உள்ளபடியே, நீங்கள் யாருமே நாட்டுக் கோழிக்கறி சாப்பிடுறதே கிடையாதா?” என்ற போது “போட்றா இவன… நாலு போட்டாத்தான் இவனுக்கெல்லாம் சரியா வரும்..” என்ற போது தர்ம அடி ஆரம்பம். யாரோ எனது வாலெட்டை உருவியதை உணர முடிந்தது.

சரியான தர்ம அடி.

**

இன்றைய உள்ளூர் கலாச்சார காவலர்களின் விதிப்படி பிராய்லர் கோழி மட்டுமே மார்க்கெட்டில் விற்கப்படுகிறது எனவும், நாட்டுக் கோழி தின்பவர்கள் இந்திய தேசியத்துக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று பலரும் நம்புவதாக காவல் நிலைய அதிகாரி விளக்கமளித்தார். உள்ளூர் நிலவரத்தை, சீரியஸாக எடுத்துச் சொல்வதில் அவர் மெனெக்கெடுவது தெரிந்தது.

அதாவது நாட்டுக்கோழிகள் மட்டுமே தேசியக் கோழிகள். பிராய்லர் கோழி நாட்டுக் கோழி அல்ல: அவைகள் மேற்கத்திய நாடுகளின் உருவாக்கம். எனவே, அவற்றைக் கொன்று தின்பது காலனிய ஆதிக்கத்தையும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் ஒரு குறீயிடாக மீள் உருவாக்கம் செய்யட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் தொலைக்காட்சியில் கூறியுள்ளதாக காவல் நிலைய அதிகாரி சொன்னார்.

தமிழ் ஆர்வலர்கள் இதை ஆதரிக்க காரணம் என்ன எனக் கேட்டதற்கு, ‘அது ரொம்ப சிம்பிளான லாஜிக். தமிழ்கடவுள் முருகப் பெருமானின் வெகிக்கிள் மயில். கொடி சேவல். தமிழ்க் கொடியின் சிம்பலான சேவலோட அம்மாதான் தமிழ்க்கோழி. அம்மாவக் கொன்னுட்டு பிள்ளயக் கொடியாக்கி கும்பிட முடியுமா? நம்ம சமூகமே தாயா புள்ளயா இருக்குறதுதான..’

Special Article: Country Chicken

“அப்ப சேவல் கறிக்கும் தடையா?”

“அத இன்னும் அவங்க முடிவு பன்னலே. சார், ரொம்ப கேள்வி கேக்குறீங்க நீங்க. எனக்கு ஃபுல் டீடெய்லும் தெரியாது. இன்னைக்கு இருக்கிற நிலைமையச் சொன்னேன். சட்டப்படி நீங்க செஞ்சது தப்பில்ல.. ஆனா லோக்கல்ல இவங்க ஸ்ட்ராங். இது பிரச்சினையாச்சுன்னா லா அண்ட் ஆர்டர் மேட்டர். ஆக, நிலைமைய புரிஞ்சிக்குங்க..”

வெளியில் நின்று கொண்டிருந்த கூட்டம் பொறுமையிழந்தது. இந்த நாட்டுக் கோழியை எனக்கு விற்ற புல்லுருவியை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என அங்கு கூடியிருந்த இந்துக் கலாச்சார சங்கம்: நாட்டுக் கோழி இனமானப் பிரிவின் பிரதிநிகளும், தமிழர் வீரர் கழகம்: முப்பாட்டன் முருகன் பாரம்பரியக் காப்பாளர்கள் – கரிமேடு பிரிவைச் சேர்ந்தவர்களும் வற்புறுத்தினார்கள். தத்தம் அடையாளப் பதாகைகளை காவல் நிலைய வாயிலின் முன் பார்வைக்கு வைத்தனர். இந்து மதம் நாட்டுக் கோழி இறைச்சிக்கு எதிரானது எனவும், தமிழர் இனம் முப்பாட்டன் முருகனின் சேவற்கொடி பெருமை காக்க யார் உயிரையும் தியாகம் செய்யத் தயங்கோம் எனவும் குரல் எழுப்பினர்.

“நாங்க நேதாஜிக்கே தைரியம் சொன்ன பரம்பரைடா..” என்று ஒரு இளைஞன் கூட்டத்தின் நடுவே நின்று வீரம் சொறிந்தார்.

காவல் நிலைய அதிகாரி கோழியை என்னிடமிருந்து கையகப்படுத்தி வெளியில் இருந்த நாட்டுக் கோழி காவலர்களிடம் ஒப்படைத்தார். ‘இங்க பாருங்க. வாங்கியவரு வெளிநாட்டுல இருந்து வந்திருக்காரு. உள்ளூர் நிலைமையின் தீவிரம் தெரிய வாய்ப்பில்லை. இத்தோட விட்டுருங்க.’ என சமாதானம் செய்தார். கூட்டம் முணுமுணுத்தது. அதில் ஒருவர், ‘ஏம்ப்பா, ஒரு சாமி கும்பிடுற பங்காளிக் கூட்டம் நீ.. நம்ம இனத்து ஆளா இருக்கிறே.. அதனால போறோம்’ என்றார். மனமில்லாமல் கலைந்து சென்றனர்.

அதிகாரி என்னிடம் வந்து, ஒன்றும் செய்ய மாட்டார்கள், தைரியமாகச் செல்லவும் என அனுமதி கொடுத்தார். ஃபோன் தொலைந்ததற்கு அத்தாட்சி பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். எனது வாலெட்டை வாங்கிக் கொண்டு வெறுங்கையுடன் வெளியே வந்த போது நண்பகலாகி விட்டது.

ஒரு இரண்டு பேர் “ஹலோ” என்றனர். நான் சற்று மிரட்சியுடன் பார்க்க அதில் ஒருவர், “டோண்ட் வொர்ரி, நாங்கள் ‘நாடு கோலி ரெவொல்யுஷனரிஸ்” என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

“நாட்டுக் கோழி ரெவொல்யுஷனரிஸா..அப்படி ஒரு அமைப்பா?”

“யெஸ் யெஸ். போன வாரந்தான் ஆரம்பிச்சோம். எங்க அமைப்பு பொலிட்டிக்கலி ரொம்ப அவேர்; கல்ச்சுரலி வெரி சென்சிட்டிவ்.”

“ஓ… என் பேர் பார்த்தசாரதி. வி பிலிவ் இன் கலினரி ரைட்ஸ்.”

“உங்க பேரு..?” மற்றவரைப் பார்த்து கேட்டேன்.

“அஷ்வகோஷ்”

எனக்கு ஆடு தும்மியது போல இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. எனது முகம் அவருக்கு ஏதோ சொல்லியிருக்க வேண்டும்.

“நான் கோழில்லாம் சாப்பிடுவேன். பீஃப் மட்டுந்தான் கிடையாது. நோ ரீஸன்ஸ். வீட்டுல சாப்பிட்டதே இல்லை. அப்படியே பழகிட்டேன். நாங்கல்லாம் பீஃப் சாப்பிட மாட்டோம்.”

பார்த்தசாரதி, தொடர்ந்தார்: “இன் ஃபாக்ட், ஐ அம் எ வெஜிடேரியன்.” எனக்குத் திக்கென்றது. “நாட் ஆன் ரிலிஜியஸ் க்ரவுண்ட்ஸ். சுற்றுப்புற சூழல் அரசியல். பட், பொலிட்டிக்கல்லி ஐ அபோர் திஸ் இன்டொலெரென்ஸ். நாட்டுக் கோழி சாப்பிடுறது தனிப்பட்ட நபரின் உரிமை.”

அடிவாங்கியது நான்தானே… இவர் கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவயப்படுகிறாரோ என்று தோன்றியது.

“வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். யூ நீட் சம்திங் டு ட்ரிங்க் அன்ட் ஈட்” என்று சொன்ன பார்த்தசாரதி, திடீரென ரொம்ப சென்சிட்டிவாக – “பட், நான் இந்த ஏரியாவிலே நான் சாப்பிடுறது கிடையாது. பக்கத்திலேயே ஒரு வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கு. ஐ ஹொப் யூ டோண்ட் மைன்ட்.”

நான் மைன்டே பண்ணவில்லை.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Special Article: Country Chicken - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]

https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/

https://minnambalam.com/political-news/orangutan-and-neo-colonialism-is-festive-advertising-murali-shanmugavelan/

https://minnambalam.com/political-news/covid19-attack-also-world-democracy/

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *