பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ. தி. மு. க எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் காரசார விவாதம் நடந்தது. இதையடுத்து அ. தி. மு. க எம். எல். ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “சட்டம் -ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. இந்த அரசு அதை தடுக்க மறுக்கிறது.
விருகம்பாக்கம் திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட பெண் காவலருக்கு இரண்டு திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள். வழக்குப்பதிவு செய்யாமல் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு நாள் கழித்து தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கஞ்சா பள்ளி, கல்லூரி பகுதிகளில் அதிகம் விற்பனையாகிறது.
தினந்தோறும் கஞ்சா பிடிபட்டதாக செய்தி வருகிறது. ஒரு பத்திரிகையில் போதைப்பொருள் வைத்திருந்த 1858 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் உருமாறி வருகிறது. நாங்கள் பேசுவது மக்கள் பிரச்சனை.
ஆனால் அதனைப் பற்றி அவையில் பேச அனுமதிக்கவில்லை. பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது பற்றி பேரவையில் கே. பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் பேரவையில் உரை நிகழ்த்துவார்கள்.
எங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு் இல்லை.
பெரிய பதவி கிடைக்கும் என்ற அடிப்படையில் சபாநாயகர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதனை கண்டித்துதான் கறுப்பு சட்டை அணிந்துள்ளோம்” என்று கூறினார்.
ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையில் நடந்த சர்ச்சைகளுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ‘ஆளுநராக இருப்பவர்கள் மத்திய அரசை திருப்திப்படுத்தினால் ஏதாவது உயர் பதவி கிடைக்கும் என்று இவ்வாறு செய்கிறார்களோ என்று தோன்றுகிறது’ என்று ஆளுநரை சாடினார்.
ஆனால் இப்போது இதே சாடலை சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
கலை.ரா
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா வாரிசு? ட்விட்டர் விமர்சனம் இதோ
!சட்டம், ஒழுங்கு பிரச்சினை: ஸ்டாலின் எடப்பாடி காரசார விவாதம்!