நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அதிமுகவை அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாத திமுக, சபாநாயகரை வைத்து பழிவாங்க நினைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தை எழுப்பி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி துணைச் செயலாளராகவும் நியமனம் செய்யவேண்டும் என்று கடிதம் கொடுத்து 2 மாதம் ஆகிறது.
பிறகு 2முறை நினைவூட்டல் கடிதமும் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் வரை சரியான முடிவு எடுக்கவில்லை. நாங்கள் கொடுத்த கோரிக்கையை ஏற்காமல், ஏற்கனவே துணைத் தலைவராக இருந்தவரையே தொடரவேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
அந்த இருக்கையிலே அமர வைத்திருக்கிறார்கள். நியாயமாக செயல்படவேண்டிய பேரவைத் தலைவர் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம்.
சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு. சட்டமன்றத்திலே அதிகமான உறுப்பினர்கள் யாரை எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் தான் நியமிக்கப்படுவது மாண்பு.
ஆனால் அந்த மரபு மீறப்பட்டிருக்கிறது. அதற்கு தான் நாங்கள் பேரவையில் நீதி கேட்டோம். இன்று(அக்டோபர் 18) காலை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்துக்கு சென்று எங்களுடைய நியாயமான கருத்துகளை தெரிவித்தோம்.
எங்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த துணைத்தலைவரை நியமிக்கவில்லை. அதற்கான உரிய பதிலை அளிக்கவில்லை. திமுக தலைவர் ஸ்டாலினின் ஆலோசனைப்படியே சட்டப்பேரவை தலைவர் செயல்படுகிறார்.
அரசியல் ரீதியாக அதிகமுவை எதிர்கொள்ள முடியாத திமுக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்க பார்க்கிறது. முன்கூட்டியே இவர்கள் தீட்டிய சதித்திட்டங்கள் அம்பலமாகி இருக்கிறது.
பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியிருக்கின்றோம். அது செல்லும் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது.
ஆனால் அதையெல்லாம் பார்க்காமல், நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
கலை.ரா
எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம்!
1 ரூபாய்க்கு சட்டை வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!