‘என் தம்பி ஞானசேகரன்’… வைரல் வீடியோ… என்ன பேசினார் அப்பாவு?

Published On:

| By Selvam

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேசும்போது, ‘என் தம்பி ஞானசேகரன்’ என்று குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பத்திரிகையாளர் நிரஞ்சன் மேகோன் எழுதிய ‘இந்தியா வென்றது 2024 – நாடும் நாடாளுமன்ற தேர்தலும்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனவரி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு, திரைப்பட இயக்குனர் பிரேம் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சியில் அப்பாவு தனது பேச்சை தொடங்கும் போது, புத்தகத்தை எழுதிய நிரஞ்சன், பிரேம் குமார், பத்திரிகையாளர் மன்ற பொதுச்செயலாளர் ஹசீப் ஆகியோரை வரவேற்று பேசினார். அப்போது, “இங்கு எனக்கு ஒரு நண்பர் சால்வை போட்டார். உங்கள் பெயர் என்ன என அவரிடம் கேட்டேன். ஞானசேகரன் என்று சொன்னவுடன் அதிர்ந்துவிட்டேன். அவர் எப்படி இங்கு வந்தார் என்று கேட்டேன். இல்லய்யா நான் வேற ஞானசேகரன் என்று சொன்னார். தம்பி ஞானசேகரன் அவர்களே” என நிகழ்ச்சிக்கு வந்த ஞானசேகரன் என்ற நபரை அப்பாவு வரவேற்றார்.

தனது உரையின் இறுதியில் பெரியாரை பற்றி அப்பாவு பேசும்போது, “100 வருடங்களுக்கு முன்பாகவே பெண்களுக்கு காக்கி சட்டையும் கையில் கம்பையும் கொடுத்தால் அவ்வளவு பேரும் பயப்படுவார்கள் என்று பெரியார் சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் என் தம்பி ஞானசேகரன் வழக்கில் புலன் விசாரணைக்கு போட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் 41 சதவிகிதம் பெண்கள் அரசு, தனியார், பொதுத்துறையில் வேலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணமான பெரியாரை நாம் மறக்க முடியாது” என்று பேசியிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் பெயரை, புத்தக வெளியீட்டு விழாவில் ’என் தம்பி ஞானசேகரன்’ என்று அப்பாவு குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்.

திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?” என்று தெரிவித்துள்ளார்.

அப்பாவுவின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ள அந்த நூலில் ஆசிரியரான, பத்திரிகையாளர் நிரஞ்சன்,

“புத்தக வெளியீட்டு விழாவிற்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் பெயர் ஞானசேகரன். எனக்கு தனிப்பட்ட முறையில் இவர் யார் என்று தெரியாது. பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழா என்பதால் பொதுமக்களில் ஒருவராகத் தான் அவர் வந்திருக்கிறார்.

எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக இருப்பவர் போல அங்கிருந்த அனைவருக்கும் விசிட்டிங் கார்டு கொடுத்தார். அவருடன் வந்திருந்த இரண்டு பெண்களும் விசிட்டிங் கார்டு கொடுத்தார்கள். நிகழ்ச்சி தொடங்கிய போதே அவரும் மேடை ஏறி வந்து அப்பாவுக்கு துண்டு அணிவித்தார்.

வயதானவராக இருந்ததாலும் நாங்கள் யாரும் அவரை தடுக்கவில்லை. அப்பாவு அவரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்டார். அதற்கு அந்த நபர் ஞானசேகரன் என சொன்னவுடன், ஐயோ இந்தப் பெயர்தான் எங்களுக்கு இப்போது பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. வழக்கு கூட வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என சிரித்தபடியே சொன்னார்.

பிறகு தனது பேச்சின் போது எதிரில் உட்கார்ந்திருந்த அந்த எல்ஐசி ஏஜென்ட் ஆன ஞானசேகரன் என்பவர் கைத்தட்டி உற்சாகமாக இருந்தார். அதனால் தான் அவரை தம்பி என குறிப்பிட்டு அவரைக் கைகாட்டி பேசினார்.

அதுதான் தற்பொழுது வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரனை தான் தம்பி என அப்பாவு அழைத்ததாக பரவிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே வந்த பத்திரிகையாளர்கள் சிலர் சிரித்தபடியே நீங்கள் பேசியதை எப்படியும் வெட்டி ஒட்டி பிரச்சினையாக்க போகிறார்கள் என அப்பாவுவிடமே சொல்லி சிரித்தனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இந்திரகுமார், அப்பாவு தனது பேச்சு குறித்த விளக்கத்தையும் மேடையிலேயே தெரிவித்துவிட்டார். நடந்தது இதுதான் என்பதை தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் அதனால் தான் இந்த பதிவு” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel