டிடி பொதிகைக்கு நேரலை கொடுக்க ஆளுநர் ரவி தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு இன்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு பேசும்போது, “ஜனவரி 6-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது அவசர காலம் நினைவுக்கு வருகிறது என்று ஆளுநர் ரவி, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
ஆளுநர் உரையின் போது சட்டமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்வதற்கு டிடி பொதிகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பிறகு மூன்று நிமிடம் மட்டும் தான் ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்தார். அதன்பிறகு வெளிநடப்பு செய்துவிட்டார்.
இதுவரை இருந்த டிடி பொதிகைக்கு பதிலாக இப்போது தமிழக அரசின் டிஎன்டிஐபிஆர் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. புதிதாக இவர்கள் ஒளிபரப்பு செய்வதால் ஆங்காங்கே சில நேரங்களில் நிறை குறைகள் இருக்கிறது.
நிச்சயமாக அது நிவர்த்தி செய்யப்படும். கேள்வி நேரம், அமைச்சர்கள் பதில், முதல்வர் பதில் என முக்கியமான நிகழ்வுகளை நேரலை செய்து வருகிறோம். நிச்சயமாக முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
டிடி பொதிகை தொலைக்காட்சியை கொண்டு வந்து படம் பிடித்து வெட்டி ஒட்டி ஏதாவது செய்யலாம் என்று ஆளுநர் நினைத்தார். அதை இந்த அரசு கண்டுபிடித்து ஆளுநரால் கொடுக்கப்பட்ட நெருக்கடியில் இருந்து, பேரவையை மீட்டது முதல்வருடைய நிர்வாகம் தான்.
தமிழக சட்டமன்றத்தையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆளுநர் ரவி அவமானப்படுத்துகின்றார். அதை வன்மையாக இந்த பேரவை கண்டிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 176 (1)-ன் படி, அமைச்சரவை எழுதிக்கொடுக்கின்ற தீர்மானத்தை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் ஜனநாயக கடமை. தேசிய கீதம் முதலில் பாட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது, அவருக்கு உரிமையில்லை.
ஆளுநர் சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, கோரிக்கை வைத்து எங்களுக்கு இதை தாருங்கள் என்று கேட்பது முறையல்ல. பொதுமக்கள் கோரிக்கை வைக்கலாம், அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பேரவை விதியில் கோரிக்கை வைக்க முடியாது” என்று அப்பாவு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரண்டு நாட்களாக ஆப்சென்ட்… ஈபிஎஸுக்கு என்ன ஆச்சு?
250 கி.மீ வேகம்… விபத்தில் அஜித்குமார் சிறு காயம் இல்லாமல் தப்பியது எப்படி?