Speaker Appavu criticised the governor
வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு பேசிக்கொண்டிருக்க, ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்த காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”2023 ஜனவரி 9-ஆம் தேதி சம்பவத்திற்கு சற்றும் குறையாத அளவுக்கு சம்பவம் 2024 பிப்ரவரி 12ஆம் தேதி நடந்திருக்கிறது.
இன்று ஆளுநர் உரையாற்றுவதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை உரிய மாண்பும் மரியாதையும் கொடுத்து பேரவை தலைவர் அப்பாவு இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.
ஏற்கனவே பிப்ரவரி 10ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டபடி ஓரிரு வாரங்களுக்கு முன்பு கேரளா ஆளுநர் அம்மாநில சட்டமன்றத்தில் நிகழ்த்திய சம்பவம் உள்ளிட்ட பல்வேறு திட்டக் கூறுகள் பற்றி ஆலோசனை செய்திருந்தார் ஆளுநர்.
இன்று தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த ஆளுநர் உரையின் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு தனது சொந்த கருத்துக்களை பேச ஆரம்பித்து விட்டார்.
‘நான் தேசிய கீதத்தை நிகழ்வின் தொடக்கத்திலும் நிறைவிலும் இசைக்கச் சொன்னேன். ஆனால், என் வேண்டுகோளை அறிவுரையை புறக்கணித்துவிட்டார்கள்.
இந்த ஆளுநர் உரை தரவு ரீதியாகவோ தார்மீக ரீதியாகவோ நான் ஏற்கும்படி இல்லை’ என்று உரையை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தார் ஆளுநர்.
அதன் பிறகு ஆளுநர் அமர்ந்ததும் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.
ஆளுநர் உரை தமிழாக்கம் முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு, ’இந்த அவைக்கு என்று சில மரபுகள் உள்ளன. யார் என்ன நினைத்தாலும் பேசிவிட முடியாது. ஆளுநர் பதவி என்பது மிக உயர்ந்த பதவி. அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை இந்த சட்டப்பேரவையும் முதலமைச்சரும் அமைச்சர்களும் அளித்து வருகிறார்கள். ஆனால் ஆளுநர் இப்படி பேசியிருக்கக் கூடாது.
எனக்கு மனதில் சில விஷயங்கள் தோன்றுகின்றன. வெள்ள நிவாரண நிதி இதுவரை பலமுறை கேட்டும் ஒரு ரூபாய் கூட வரவில்லை. கணக்கு கேட்கப்படாமலேயே இருக்கும் பிஎம் கேர் ஃபண்டில் இருந்து ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாயை ஐயா அவர்கள் வாங்கி தருவார்களா?” என்று ஆளுநரை பார்த்து கையை காட்டி சபாநாயகர் தெரிவிக்க… சட்டமன்றம் வியப்பில் ஆழ்ந்தது.
அடுத்த சில நொடிகளில் “சாவர்க்கர் வழிவந்த கோட்சே வழிவந்த உங்களுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை இந்த சட்டமன்றம்” என்று சபாநாயகர் பேசினார்.
இதை எதிர்பார்த்திராத ஆளுநர் சாவர்க்கர், கோட்சே ஆகிய வார்த்தைகளை கேட்டதும் சட்டென தன்னுடைய அதிகாரிகளைக் கேட்டு சில நொடிகள் காதோடு பேசி உடனடியாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
இதேபோல கடந்த 2023 ஆளுநர் உரையில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பகுதிகளை சேர்த்தும் சில பகுதிகளை நீக்கியும் ஆளுநர் ரவி வாசித்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினே எழுந்து நின்று ஆளுநர் வாசித்த உரை அவை குறிப்பில் ஏறாது என்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரைதான் அவை குறிப்பில் இடம் பெறும் என்றும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
அதே வகையிலான தீர்மானத்தை இன்று முதலமைச்சர் கொண்டுவராமல் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில்… ‘ஆளுநர் தொடர்ந்து அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி வருகிறார். சட்டமன்றத்தில் நம்மால் எந்த இடையூறும் அவருக்கு ஏற்பட்டது என்று இருக்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார் முதல்வர்.
குறிப்பாக ஆளுநர் உரையின்போது வெள்ள நிவாரணம் கேட்டு கோஷங்களை எழுப்ப… கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களைத் தொடர்புகொண்ட முதல்வர் தரப்பினர், ’அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள். நம்மால் ஆளுநருக்கு எந்தவிதமான இழுக்கும் சட்டமன்றத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்று முதலமைச்சர் கருதுகிறார். அதனால் ஆளுநர் உரையின்போது எந்த இடையூறும் செய்ய வேண்டாம்’ என்று அழுத்தமான வேண்டுகோளை வைத்தனர்.
அதனால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையின்போது கோஷமிடுவதாக இருந்த திட்டத்தை கைவிட்டனர்.
இப்படி ஆளுநரோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் பெருந்தன்மையோடு தான் முதலமைச்சர் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு தயாரானார்.
அதே நேரம் சபாநாயகர் அப்பாவு இந்த கூட்டத்தொடரில் திடீரென ஆர்ப்பரித்தது சில திமுக சீனியர்களுக்கு தர்ம சங்கடத்தை, நெருடலை ஏற்படுத்தியிருந்தாலும், திமுகவின் இளைய தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கின்றன.
ஆளுநர் உரை நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சர் சட்டமன்றத்தை விட்டு புறப்பட்டு சென்றதும், திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, ’எங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகளை போட்டுவிட்டு நீங்க மட்டும் அணையை உடைத்து விட்டுட்டீங்களே’ என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆளுநரை இன்று கோட்சேவின் வழி வந்தவர்கள் என்று சட்டமன்றத்தில் விமர்சனம் செய்த சபாநாயகருக்கு எதிராக என்ன செய்யலாம் என்று ஆளுநர் மாளிகை தீவிர ஆலோசனையில் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ஷென் ஃப்ளாஷ்: வராத கூட்டணித் தலைவர்கள்.. கோபமாய் புறப்பட்ட நட்டா
Speaker Appavu criticised the governor