அதிமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்!

அரசியல்

அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு இன்று (செப்டம்பர் 13) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் அரங்கத்தில் எழுத்தாளர் ராம்குமார் எழுதிய புத்தக வெளியீட்டு விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து தெரியாமல் இருந்ததாகவும், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்ள இருந்ததாகவும், ஆனால் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அதை மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

அப்பாவு இவ்வாறு பேசியிருப்பது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளருமான பாபு முருகவேல் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு எடுக்கப்படாத நிலையில் பாபு முருகவேல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அங்கும் இந்த வழக்கு கோப்பு எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு படி மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அப்பாவு மீதான அவதூறு வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக சபாநாயகர் அப்பாவு, நேரில் ஆஜரானார்.

அப்போது அவர், நீதிமன்ற சம்மனை பெற மறுத்துவிட்டதாக கூறியது தவறு. நீதிமன்ற சம்மன் ஏதும் எனக்கு வரவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது என கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்தில் ஆஜரானதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த வழக்கு சம்பந்தப்பட்ட சம்மன், கடந்த 12ஆம் தேதி சென்னையில் உள்ள இல்லத்துக்கு வந்ததாகவும், அதை நான் வாங்க மறுத்ததாகவும் அஞ்சல் துறை போல் எழுதி நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த 12ஆம் தேதி திருநெல்வேலியில் எனது கிராமத்தில் தான் இருந்தேன்.

எதாவது தபால் வந்ததா என வீட்டு காவலர்களிடம் கேட்டதற்கு அப்படி ஏதும் வரவில்லை என்றார்கள்.

சென்னையில் இருந்த போதும், நெல்லை மாவட்டத்தில் சொந்த ஊரில் இருந்த போதும் எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.

சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடமும் சம்மன் அல்லது கடிதங்கள் ஏதும் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். இதை நீதிபதியிடமே சொல்லி, நீங்களே விசாரித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து சர்ச்சைப் பேச்சு… டாக்டர் காந்தராஜ் மீது ரோகிணி புகார்!

அன்னபூர்ணா உரிமையாளர் வீடியோ வெளியீடு: மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *