ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவதற்காக நவம்பர் 18-ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு இன்று (நவம்பர் 16) தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி இன்று திருப்பி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார். இப்போது பல மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என்பதற்காக நவம்பர் 18-ஆம் தேதி சட்டமன்ற அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
அரசியலமைப்பு விதிப்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவருக்கோ, மீண்டும் மாநில அரசுக்கோ திருப்பி அனுப்ப வேண்டும். நீதிமன்றம், குடியரசு தலைவர், ஆளுநர் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க மாட்டோம். சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியவுடன் ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதேபோல நீட் தேர்வு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் மசோதாவை குடியரசு தலைவர் பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் விவரம்!
பன்னீர் மேல்முறையீட்டு வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!