முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருந்தால், உயிரோடு இருந்திருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே அதிமுக 53-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, “அதிமுக ஆட்சியில் காவல்துறையை மரியாதையாக நடத்தினோம். ஆனால் இப்போது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதனால் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறை யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
அதிமுகவினர் எங்கு சென்றாலும் அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். கடந்த வாரம் தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். என் மீதும் கடம்பூர் ராஜூ மீதும் வழக்கு போட்டிருக்கிறார்கள். இப்படி திமுக ஆட்சியில் கணக்கில்லாமல் வழக்கு போடுகிறார்கள். அதனால் எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை. காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வேலுமணி, “2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, 2016-லும் தொடர் வெற்றி பெற்றார். எங்களையெல்லாம் எம்.எல்.ஏ ஆக்கினார்.
அவர் உடல்நிலை குன்றி இருந்தபோது அமெரிக்காவுக்கு சென்று ட்ரீட்மென்ட் எடுத்திருந்தால் இன்னும் உயிருடன் இருந்திருப்பார். இந்த கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் அவர் அமெரிக்காவுக்கு செல்லவில்லை”என்று தெரிவித்தார்.
இந்த பேச்சு குறித்து வேலுமணி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஜெயலலிதா இறந்ததில் இருந்து இந்த கருத்தைப் அவர் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் பேசியிருக்கிறார். இப்போதும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு மேடையிலும் அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற ஜெயலலிதா மேற்கொண்ட தியாகத்தை நினைவு கூறும்போது வேலுமணி இப்படி பேசுவார். இது ஒன்றும் புதிதல்ல” என்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
24 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த அலைபாயுதே கார்த்திக் -சக்தி
பத்திரிகையாளர் ஓய்வூதியம்… நலவாரியக் கூட்டத்தில் முக்கிய முடிவு!