’ஓசி’ டிக்கெட் விவகாரத்தில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைக் கண்டித்து கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 28ஆம் தேதி நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இலவச பயண டிக்கெட்டை, ‘ஓசி’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவையில் அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி துளசியம்மாள், “என்னால் ஓசியில் போக முடியாது. காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடு” என நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
பின்னர் இந்த வீடியோ அதிமுக ஐடி-விங்க்கைச் சேர்ந்த பிருத்திவிராஜ் திட்டமிட்டு எடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து துளசியம்மாளை சாட்சியாகக் கொண்டு பிருத்திவிராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக கொறடாவும், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவுமான முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமைச்சர் பொன்முடி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்கிற வகையில் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றை இந்த அரசு உயர்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எஸ்.பி.வேலுமணி, “பெண்களைப் பார்த்து ஓசி பஸ்ஸில் போறீங்கல்ல? என கூறும் பொன்முடி அவரது சொந்த பேருந்திலா ஓசியில் அழைத்து செல்கிறார்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், “காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மதுக்கரை வழியாக கண்ணமநாயக்கனூர் செல்லும் பேருந்தில், மூதாட்டி காசு கொடுத்து டிக்கெட் கேட்ட விவகாரத்தில் அதிமுக தான் காரணம் என பிருத்திவிராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண்: 427/2022 படி பிருத்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த், துளசியம்மாள் ஆகியோர் மீது 294(b), 504, 505(i)(b), 505(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ், திமுகவைச் சேர்ந்த நகரச் செயலாளர் ராமு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் கேட்டதில் பிருத்திவிராஜ் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குற்ற எண் 427/2022 டிஎஸ்ஆர் தவறானது என காவல் துறையினரே கூறுகின்றனர். அப்படி இருக்கும் போது இந்த தவறான டிஎஸ்ஆர் எப்படிப் பரவுகிறது. யார் தவறு செய்கிறார்கள் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோன்று பிருத்திவிராஜ் மீது கோவை மாவட்டம் மதுக்கரை காவல்நிலையத்தில் பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இல்லையெனில் எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி பெற்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி அலுவலகம் முன்பும் ஜனநாயக ரீதியாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ஆளுநர், முதல்வர்!
‘என் இதயம் கனத்துவிட்டது’ : சச்சி மனைவி உருக்கம்!