விக்கிரவாண்டி: பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியா?

Published On:

| By Aara

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 14) காலை அறிவித்துள்ளார்.

முன்னதாக விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முன்னிட்டு வேட்பாளர் தேர்வு செய்வது சம்பந்தமாக பாமக உயர்மட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று ஜூன் 13 ஆம் தேதி கூடியது.
இந்த கூட்டத்தில் சௌமியா அன்புமணி வேட்பாளராக தேர்வு செய்வதற்கு ஆலோசனைகள் செய்ததாக தைலாபுரம் தோட்டத்தில் இருந்து மேலதிகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திமுக தலைமை அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்து தேர்தல் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.

அதிமுகவின் நிலைப்பாடு பற்றி விரைவில் அறிவிப்போம் என்று நேற்று (ஜூன் 13) இரவு கோவையில் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில்தான் நேற்று ஜூன் 13 ஆம் தேதி பாமக உயர்மட்டக் குழு கூட்டம் காலை 11.00 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிந்தது.

டாக்டர் இராமதாஸ் தலைமையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி கே மணி, வழக்கறிஞர் பாலு, ஏ. கே. மூர்த்தி உட்பட 19 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியபோதே… ‘அறைக்குள் நடக்கும் கூட்டத்தில் பேசுவதை வெளியில் சொல்லாதீர்கள். ரகசியத்தை காக்க வேண்டும்’ என்றபடியே பேச ஆரம்பித்தார் டாக்டர் ராமதாஸ்.
தேர்தல் முடிவுக்குப் பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பொதுவாக கட்சி நிலவரம் பற்றி முதலில் பேசியுள்ளார் ராமதாஸ்.

“கடந்த இரண்டு தேர்தலிலும் கட்சி அங்கீகாரத்தை இழந்திருக்கிறோம், கஷ்டப்பட்டு பெற்ற சின்னத்தைக் காப்பாற்ற வேண்டும். அடுத்தது நமக்கு சின்னம் கிடைக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை, நான் ஒரு முடிவு எடுத்தால் நீங்கள் ஒரு முடிவு எடுக்கறீங்க” என கோபமாகவே பேசியுள்ளார்.

எதிரில் அமர்ந்து இருந்த அன்புமணி உட்பட அனைவரும் அமைதியாக இருந்தனர்.

தொடர்ந்து பேசிய ராமதாஸ், ‘கட்சி கொள்கை மற்றும் வன்னியர் சங்கம் கொள்கையை மக்களிடம் நீங்கள் கொண்டு செல்ல வில்லை. தொடர்ந்து வாக்குகள் சரிவுக்கு என்ன காரணம்? மீண்டும் நமது வாக்குகளை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்? நமது (வன்னியர் சமூதாய) மக்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்று ஒவ்வொருவராகக் கேட்டுள்ளார்.

சிலர் வன்னியர் சமூதாய மக்களின் குறைகளையும் எதிர்பார்ப்புகளையும் பேசியுள்ளனர்.

“இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்திற்கு நாம் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், நாம் வன்னியர் அறக்கட்டளை எனத் துவங்கிய கல்லூரியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் அய்யா…” என்று கருத்துகளை சொல்லி உள்ளனர்.

இடையில் குறுக்கிட்டு பேசிய இராமதாஸ், “தற்போது நமக்குள்ள ஒரு மகிழ்ச்சி பெண்கள் வாக்குகள் அதிகரித்துள்ளதுதான். தர்மபுரியில் சௌமியா நல்ல வாக்குகள் பெற்று இருக்கிறார். வன்னியர் வாக்குகளில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.
தேர்தலில் பெண்களை முன்னிலைப் படுத்துவது சென்டிமென்ட்டாக நல்லா இருக்கிறது” என்று பேசியிருக்கிறார் ராமதாஸ்.

இதன் பிறகு இடைத் தேர்தல் பற்றிய ஆலோசனை நடந்துள்ளது. இதுகுறித்து பாமக நிர்வாகிகளிடம் பேசியபோது,

“இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் விழுப்புரம் மாசெ.வும், மாநில நிர்வாகியுமான  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சகலையான புகழேந்தியிடம் தலைமை சார்பில் கேட்கப்பட்டுள்ளது.  ஆனால், இப்போது பொருளாதார சிரமத்தில் இருக்கிறேன் என்று தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 40% சதவீதம் வன்னியர் வாக்குகள் உள்ளது ஏறத்தாழ 30% சதவீதம் பட்டியல் சமூகத்தின் வாக்குகள் உள்ளது. மற்ற சமூகத்தினர் வாக்குகள் 30 சதவீதம் உள்ளது.

தேர்தலில் பெண்களை முன்னிலைப் படுத்துவது சென்டிமென்ட்டாக நல்லா இருக்கிறது என்று கூட்டத்தில் டாக்டர் பேசினார். அந்த வகையில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணியை விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக  நிறுத்தினால் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என ஆலோசிக்கப்பட்டது.

தருமபுரியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த அனுதாபம் உள்ளது. மேலும் ஒவ்வொரு பூத்துக்கும் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை நியமித்து வாக்குகளை வாங்கலாம் என்று நினைக்கிறார் டாக்டர். அப்படி இல்லை என்றால் பெரிய மகள் காந்தி மகன் முகுந்தனை நிறுத்தவும் செகன்ட் ஆப்ஷன்  இருக்கிறது” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள்.

வணங்காமுடி

”நீட் மோசடிக்கு முடிவு கட்டுவது எங்கள் பொறுப்பு” – முதல்வர் ஸ்டாலின்

மருத்துவர் சுப்பையா கொலை : 9 பேரை விடுதலை செய்ய உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel