பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 27) டெல்லியில் 12 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. நாளை (மே 28) புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் பிரதமர் மோடி.
ஆனால் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திராவைத் தவிர தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த முதலமைச்சரும் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தென்னிந்தியாவைத் தாண்டி டெல்லி, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்களும் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஜப்பான் பயணத்தில் இருப்பதால் அவர் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இன்று ஹைதராபாத்துக்கு வருகை தரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதனால் இந்த இரு முதல்வர்களுமே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூருவில் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்கிறார். அதனால் அவர் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தென்னிந்திய மாநில முதல்வர்களில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நேற்றே டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
தென்னிந்திய மாநில முதல்வர்கள் தவிர டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரும் இன்றைய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டம் பற்றி மேற்கு வங்காள நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா கூறுகையில், “எங்கள் மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்கள் இருப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தில் நிதியமைச்சரும், தலைமைச் செயலாளரும் கலந்துகொள்கிறோம் என்று மத்திய அரசுக்கு தகவல் அனுப்பினோம். ஆனால், முதலமைச்சர்தான் கலந்துகொள்ளவேண்டும் என்று மத்திய அரசிடம் இருந்து தகவல் வந்ததால் மேற்கு வங்காளம் சார்பில் எந்த பிரதிநிதியும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
அதேநேரம் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேச மாநில முதல்வர்கள் இன்று டெல்லியில் இருக்கிறார்கள். அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட் இன்றைய கூட்டத்தில் உடல் நிலை காரணமாக கலந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது.
–வேந்தன்