மீண்டும் வெல்வாரா தமிழச்சி…குறிவைக்கும் ஜெயவர்தன்…தட்டிப் பறிப்பாரா தமிழிசை..தென்சென்னை ரேஸில் முந்துவது யார்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

21 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதிகளில் ஒன்றான தென்சென்னை தொகுதி மூன்று முக்கிய வேட்பாளர்களுடன் கடுமையான மும்முனைப் போட்டிக்கு தயாராகி வருகிறது. திமுக சார்பில் வேட்பாளராக மீண்டும் தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் மீண்டும் களமிறங்குகிறார். தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் களமிறங்குகிறார். அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழ்செல்வி போட்டியிடுகிறார்.

வரலாற்றில் வி.ஐ.பி தொகுதியான தென்சென்னை

தென்சென்னை தொகுதி துவக்கத்திலிருந்தே தமிழ்நாட்டின் வி.ஐ.பி தொகுதியாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியமான பங்களித்த தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகவும் தென்சென்னை இருக்கிறது.

திமுக தலைவர் அண்ணாதுரை முதன்முதலில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தென்சென்னை தொகுதியில் தான். சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா இங்கு வெற்றிபெற்றார். திமுக தேர்தலில் பங்கேற்கும் கட்சியாக உருவெடுத்து சந்தித்த முதல் பாராளுமன்றத் தேர்தலான 1962 தேர்தலிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு இத்தொகுதி திமுக வசமே இருந்தது.

இத்தொகுதியில் நடந்த தேர்தல்களில் திமுக 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வென்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக முதல் எம்.பியாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி இருந்தார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இத்தொகுதியின் எம்.பியாக இருந்திருக்கிறார்கள். 1996 இல் துவங்கி தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் டி.ஆர்.பாலுவே தென்சென்னை தொகுதியை கையில் வைத்திருந்தார். அதன்பிறகு 2009 மற்றும் 2014 என இரண்டு தேர்தல்களில் அதிமுக வசம் வந்த தென்சென்னை தொகுதி, 2019 இல் மீண்டும் திமுகவின் கைகளுக்குள் வந்தது.

தென்சென்னையின் சட்டமன்றத் தொகுதிகள்

தென்சென்னை தொகுதி என்பது விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மைலப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும். தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி இத்தொகுதியில் தான் இருக்கிறது.

தென்சென்னையில் என்ன ஷ்பெஷல்? என்ன சிக்கல்?

இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மென்பொருள் நிறுவனங்கள், தியாகராய நகர் மற்றும் கோயம்பேடு போன்ற வணிகம் செழித்தோங்கும் பகுதிகள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் ஏராளமான கல்வி நிறுவனங்களும் இத்தொகுதியில் உள்ளன. சென்னையின் மிக முக்கியமான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இத்தொகுதியில் தான் இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் சூழ்ந்திருக்கும் டிராஃபிக், குடிநீர் பிரச்சினை, மழைநீர் வடிகால் பிரச்சினை, கழிவுநீர் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாதது போன்றவை இத்தொகுதியின் கவனிக்கத்தக்க பிரச்சினைகளாக உள்ளன.

திமுக வாக்கு சதவீதம் சரிந்ததா? 2019 மற்றும் 2021 தேர்தலின் வாக்குகள் – ஒரு ஒப்பீடு

2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயவர்தனைக் காட்டிலும் 2,60,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்ற வாக்குகளின் விவரங்களை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 திமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதியில் நடந்த சில முக்கியமான மாற்றங்கள் நமக்கு தெரிய வருகின்றன.

 

  • முதலில் விருகம்பாக்கம் தொகுதி.

2019 பாராளுமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் தமிழச்சி தங்கபாண்டியன் அதிமுகவின் ஜெயவர்தனை விட 36,052 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஏ.எம்.வி பிரபாகர் அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் 18,367 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் என்பது பாதியாகக் குறைந்திருக்கிறது.

  • இரண்டாவதாக சைதாப்பேட்டை தொகுதி.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் தமிழச்சி தங்கபாண்டியன் 49,859 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் அதிமுக வேட்பாளரை விட 29,408 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தார்.

இங்கும் 2 ஆண்டுகளில் வாக்கு சதவீதம் ஏறக்குறைய பாதியாகக் குறைந்துள்ளது.

  • மூன்றாவதாக தியாகராய நகர் தொகுதி.

2019இல் அதிமுக வேட்பாளரை விட 11,734 வாக்குகள் அதிகம் பெற்றிருந்த திமுக, 2021 இல் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

  • நான்காவதாக மயிலாப்பூர் தொகுதி.

இத்தொகுதியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு வித்தியாசமாக 31,779 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 12,663 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தது.

  • ஐந்தாவதாக வேளச்சேரி தொகுதி

2019 இல் 34,734 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 சட்டமன்றத் தேர்தலில் 4,352 வாக்குகளே அதிகம் பெற்றது. இரண்டு ஆண்டுகளில் திமுகவின் வாக்குகள் கிட்டத்தட்ட 8 மடங்கு குறைந்திருந்தது.

  • ஆறாவதாக சோழிங்கநல்லூர் தொகுதி

2019 இல் 96,930 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக, 2021 இல் 35,405 வாக்குகளே அதிகம் பெற்றிருந்தது.

 

6 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றபோதும் மொத்தமாக சேர்த்துப் பார்க்கும்போது 2019-இல் 2,62,000 ஆக இருந்த திமுகவின் வெற்றி வித்தியாசம், 2021 சட்டமன்றத் தேர்தலில் 1,00,000 வாக்குகளாக குறைந்தது.

ஒருபக்கம் வாக்கு வித்தியாசம் குறைந்திருந்தாலும், இன்னொரு பக்கம் தென்சென்னை தொகுதியில் கணிசமான வாக்குகளைப் பிரித்த மக்கள் நீதி மய்யம் இம்முறை திமுக கூட்டணியில் இணைந்திருப்பது திமுகவிற்கு இத்தொகுதியில் கூடுதல் பலமாகவே அமையும்.

தமிழச்சி தங்கபாண்டியனின் ப்ளஸ் & மைனஸ் என்ன?

தமிழச்சி தங்கபாண்டியனைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆக்டிவான எம்.பிக்களில் ஒருவராக இருந்திருக்கிறார். தமிழ்நாட்டின் எம்.பிக்களிலேயே அதிகமாக 8 தனிநபர் மசோதாக்களை பாராளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறார். 292 கேள்விகளை எழுப்பியதுடன், 63 பாராளுமன்ற விவாதங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். தன்னை ஒரு சிறந்த பாராளுமன்றவாதியாக முன்வைத்து தமிழச்சி பிரச்சாரம் செய்ய முடியும் என்பது அவரின் பலம்.

திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் போன்றோரின் செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது இத்தொகுதியில் திமுகவின் முக்கியமான மைனசாக இருக்கிறது. மேலும் 2023 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தென்சென்னை தொகுதி மக்கள் அடிப்படை வசதிகளின்றி பாதிக்கப்பட்ட விவகாரமும் தேர்தலில் எதிரொலிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதும் திமுகவிற்கான வாய்ப்புகளை கடுமையாக்கும் காரணியாக இருக்கிறது.

ஜெயவர்தன் எதை குறிவைக்கிறார்?

அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த முறை பாமக, பாஜக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தன. இந்த முறை தேமுதிகவும், எஸ்.டி.பி.ஐ கட்சியும் தான் உடன் இருக்கின்றன. பாஜகவும், பாமகவும் இல்லாதது அதிமுகவின் வாக்குகளில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் 2016 சட்டமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக தனியாக நின்று மொத்தமாக 86,000 வாக்குகளையும், பாமக தனியாக நின்று மொத்தமாக 43,000 வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் எதிர்கட்சியாக பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் அதிமுக இருப்பது அதன் பலவீனம். மேலும் கூட்டணி கணக்குகளில் சொதப்பியதும் அதிமுகவின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜெயவர்தன் இத்தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு, அதில் ஒரு முறை வெற்றியும் பெற்று, மக்களிடையே அறிமுகமான முகம் என்பது அதிமுகவின் பாசிட்டிவ் விசயமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் ஜெயகுமாரின் மகனாகவும் இருப்பதால் அவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று தீவிரப் பிரச்சாரத்தில் இறங்குவதில் அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

மேலும் தொகுதியில் ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தியை எப்படியாவது தங்கள் வசமாக்கிக் கொள்ள திட்டமிட்டு வேலைத் திட்டங்களை வகுத்து வருகிறார்கள் அதிமுகவினர். பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதன் மூலமும், எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலமும் சிறுபான்மையினரின் வாக்குகளை அதிக அளவில் பெற முடியும் என்ற நம்பிக்கையிலும் இறங்குகிறது அதிமுக. மேலும் ஜெயவர்தன் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இத்தொகுதியில் உள்ள மீனவ மக்களின் வாக்குகளை குறிவைத்து பிரச்சாரம் செய்ய முடியும் என்பதும் அவரது பலம். இப்படியான பாசிட்டிவ்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு தென்சென்னையை தன் வசமாக்க பல திட்டங்களை வகுத்து வருகிறது அதிமுக.

தமிழிசை செளந்தர்ராஜன் களமிறங்கியது ஏன்?

தமிழிசை செளந்தர்ராஜனின் முகம் மக்களுக்கு அறிமுகமான முகம் என்பது பாஜகவின் பாசிட்டிவ் விசயங்களில் முதன்மையானது. பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் என்பதாலும், ஆளுநர் பதவியில் இருந்தவர் என்பதாலும் அவரை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் அதிக கவனம் செலுத்தி வேலை செய்வார்கள் என்பது அவருக்கு கூடுதல் பலம். மற்ற தொகுதிகளைக் காட்டிலும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தென்சென்னையில் கொஞ்சம் கூடுதலாக இருப்பதும் பாஜகவிற்கான பலங்களில் ஒன்று.

அதேசமயம் பாஜக அரசின் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு மக்களிடையே பல அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக சிலிண்டர் விலை 1150 ரூபாய்க்குச் சென்றது, பெட்ரோல் விலை 110 ரூபாய்க்குச் சென்றது போன்றவை தேர்தலில் எதிரொலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தேர்தல் நேரத்தில் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் இந்த விலையேற்றங்கள் கணிசமான விளைவை ஏற்படுத்தவே செய்யும். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது பாஜகவிற்கு மிகப்பெரிய மைனஸ் என்றே சொல்லலாம்.

திமுகவை எதிர்த்து கடுமையான பிரச்சாரத்தினை பாஜக தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதால், திமுக மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை பாஜகவிற்கான வாக்காக மாற்ற முடியும் என்று முழுநம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறார் தமிழிசை செளந்தர்ராஜன்.

உயர்ந்த நாம் தமிழர் வாக்கு சதவீதம்

 

இன்னொரு பக்கம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகளும் இத்தேர்தலில் முக்கியமானதாகவே அமையும். 2019 தேர்தலில் தென்சென்னை தொகுதியில் 50,000 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை, 2021 இல் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 92,000 ஆக அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

கைப்பற்றப் போவது யார்?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதிமுக கூட்டணி உடையாமல் இருந்திருந்தால் திமுகவிற்கு தென்சென்னையில் மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது. திமுக ஆட்சியின் மீதும், திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மீது உள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள அதிமுக, பாஜக இரண்டு கூட்டணிகளும் கடுமையாக முயற்சித்து வருகின்றன. பாஜக ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ள திமுகவும் முழுவீச்சில் இறங்கியுள்ளது. உண்மையிலேயே தென்சென்னை தொகுதியின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கப் போவது யார் என்பது ஜூன் 4 ஆம் தேதி தான் தெரியவரும்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதிமுகவுக்கு பம்பரம்? தேர்தல் ஆணையம் சொன்ன முக்கிய பதில்!

கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?

காங்கிரஸ் விளவங்கோடு வேட்பாளர்: யார் இந்த தாரகை?

 

+1
0
+1
1
+1
1
+1
5
+1
3
+1
1
+1
0

1 thought on “மீண்டும் வெல்வாரா தமிழச்சி…குறிவைக்கும் ஜெயவர்தன்…தட்டிப் பறிப்பாரா தமிழிசை..தென்சென்னை ரேஸில் முந்துவது யார்?

  1. தி.மு.க. மீண்டும் வெற்றி பெற 100% வாய்ப்பு இல்லை தி.மு.க அக்கா தமிழ்ச்சி தங்கபாண்டியன். மக்கள் செய்த பணி என்னா ? ஒன்று கூட இல்லை. மீண்டும் ஜான் பாண்டியன் . கூட்டணி கட்சி சார்ந்த அக்கா தமிழிசை வெற்றி பெறுவார் 100% மக்கள் பணி மக்கள் உதவிகள் அந்த தொகுதி மக்கள்ளின் அனைத்து கொரிக்கையும் நிறைவேற்ற வேண்டும்.‌ அவர்கள் இல்லை ஒரு போதும் மக்கள் உங்களை மணிக்கமாட்டர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *