சென்னையில் போலீஸ் தடையை மீறி போராட்டம் செய்ய வந்த சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயக அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போலீசாரிடம் பாமகவினர் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீஸ் தடையையும் மீறி போராட்டம் நடத்த பாமக மகளிர் அணியினர் திட்டமிட்டிருந்தனர்.
இதையடுத்து வள்ளுவர் கோட்டத்திற்கு பாமகவினர் வந்தால் அவர்களை கைது செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக சவுமியா அன்புமணியிடம் அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், “எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
இந்நிலையில் 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த பாமகவினரை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிய நிலையில் சவுமியா அன்புமணியும் அங்கு வந்தார். தனது காரில் இருந்து இறங்கிய அவரையும் கைது செய்து உடனே போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
எனினும், “விடமாட்டோம்… பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரை விடமாட்டோம்” என்று கோஷம் எழுப்பியவாறே போலீஸ் வேனில் சென்ற சவுமியா உள்ளிட்ட பாமகவினரை அந்த பகுதியில் இருந்த சமுதாய கூடத்தில் போலீசார் அடைத்தனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பஸ்சில் மூட்டை கடி…நீதிமன்ற உத்தரவால் பீதியடைந்த ரெட் பஸ் ஆப்!
தமிழ்நாட்டில் 13 புதிய நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாகிறது!