மல்லிகார்ஜுன கார்கேவிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஒப்படைத்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று (அக்டோபர் 26) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பதவியேற்றார்.
நிம்மதியாக உணர்கிறேன்!
இந்நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ”புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
கட்சியில் சாதாரண தொண்டராகத் தொடங்கி தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து அவர் இப்போது இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் இப்போது தான் நிம்மதியாக உணர்கிறேன்.
காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே சில பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அவற்றை நாம் சரி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இது புதிது இல்லை. கடந்த காலங்களிலும் காங்கிரஸ் பல பெரிய சவால்களையும் ஆபத்துகளையும் சந்தித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் தோல்வியை ஏற்றுக் கொண்டது இல்லை.” என்று தெரிவித்தார்.
சோனியா காந்தி நமக்கு வழிகாட்டி!
இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, ”சோனியா காந்தி நமக்கு வழிகாட்டி, அவர் காங்கிரஸ் கட்சியைக் கடினமான சூழலிலும், ஏற்ற இறக்கத்திலும் வழிநடத்தினார்.
எதிர்கால சவால்களுக்குக் கட்சி தயாராகும் போது அவர் நம் பலத்தின் ஆதாரமாக எப்போதும் இருப்பார்” என்று கூறியிருந்தார்.
மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளார்
”நமது புதிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சிக்காகவும் இந்திய மக்களுக்காகவும் அவர் இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுள்ளதால் வாழ்த்துக்கள்” என்று ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார்.
அன்பிற்காக அனைத்தையும் செய்தீர்கள்!
பிரியங்கா காந்தி கூறுகையில், ”இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, நாட்டிற்காகப் போராடக் கட்சியை வலுப்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.
அவரது அனுபவமிக்க தலைமையின் கீழ் போராட்டத்திற்கான வலுவான பாதை உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயார் சோனியா காந்தி குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன். உலகம் என்ன சொன்னாலும் நினைத்தாலும் நீங்கள் அனைத்தையும் அன்பிற்காகச் செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
தேவர் தங்கக் கவசம்: பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு!
கோவை கார் விபத்து: குற்றவாளிகளுக்கு 3 நாள் போலீஸ் காவல்!