ராகுல்காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றார் சோனியா காந்தி!

அரசியல்

பாஜக ஆளும் கர்நாடகாவில் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (அக்டோபர் 6) இணைந்துள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தினை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகம், கேரளா மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி தற்போது கர்நாடாகாவில் தொடர்ந்து வருகிறார்.

அவருடன் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

நடைபயணம் நிறுத்தம்!

தசரா, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக நடைபயணம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக சூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி இருந்தார்.

மைசூரு வந்தார் சோனியா காந்தி!

இந்நிலையில் நடைபயணத்தில் பங்கேற்பதற்காக கடந்த 3ம் தேதி காங்கிரஸ் தலைவரும், ராகுல்காந்தியின் தாயாருமான சோனியா காந்தி மைசூரு வந்தார்.

ராகுல் காந்தி இருந்த அதே ரிசார்ட்டில் தங்கி இருந்த சோனியாகாந்தி, ராகுலுடன் சேர்ந்து நேற்று எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட்டனர்.

பின்னர் தசரா பண்டிகையையொட்டி பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தனர்.

sonia gandhi march with rahul gandhi in karnataka

சோனியா காந்தி நடைபயணம்!

இந்நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து இன்று தனது நடைபயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.

அவருடன் சோனியா காந்தியும் இணைந்து நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் கலந்து கொள்வதற்கு முன் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.

இதனை தொடர்ந்து பல்லாரியில் நடைபெறும் பேரணி கூட்டத்திலும் சோனியா காந்தி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் சோனியா காந்தி, தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ராகுல் காந்தியுடன், சோனியாவும் நடைபயணத்தில் பங்கேற்றுள்ளது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழ்நாட்டில் மிக கனமழை… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

விக்ரம் சாதனையை வென்ற பொன்னியின் செல்வன்: கமல் மகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *