சோனியா காந்தி, ஜே.பி.நட்டா, எல்.முருகன் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தோடு 56 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகாலம் முடிவடைகிறது.
மாநிலங்களவை எம்.பி.க்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் போட்டியிடக் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
1999 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிட்டு மக்களவை எம்.பி.ஆனார் சோனியா காந்தி.
அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் ரேபரெலி தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல்நிலை காரணமாக மக்களவைத் தேர்தலில் நிற்காமல் மாநிலங்களவை பதவிக்கு சோனியா போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த சோனியா காந்தி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரசிலிருந்து மதன் ரத்தோர், சுனிலால் காசியா ஆகியோரும் எம்.பி. ஆக போட்டியின்றி ராஜஸ்தானில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
ராஜஸ்தானில் 10 மாநிலங்களவை எம்.பி., இடங்கள் உள்ளன. இந்த முடிவுக்குப் பிறகு அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு 6 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில் அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் நீலகிரி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகன் உள்ளிட்டோர் அடுத்த 6 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக தொடரவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டிஜிட்டல் திண்ணை: மோடியுடன் ஒரே மேடை- தூத்துக்குடியில் சம்பவம் செய்ய காத்திருக்கும் ஸ்டாலின்?