காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டார்.
பின்னர் டெல்லி சென்ற நிலையில், லேசான காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி இன்று அங்குள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், “சோனியா காந்தி லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வைரஸ் சுவாசத் தொற்று சிகிச்சைக்காக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் காய்ச்சல் காரணமாக மார்ச் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் தற்போது 3வது முறையாக உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிபராக முயற்சிக்கும் மோடி: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஸ்டாலின் கண்டனம்!
சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கேள்வி நேரத்துக்கு செக்!