ரயில் டிக்கெட் வாங்க கூட காசு இல்லை, காங்கிரசை நிதி ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளனர்.
“2018-19 நிதியாண்டு கணக்குகளை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது, ரூ.210 கோடி அபராத தொகை செலுத்த வேண்டும்” என்றும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் தெரிவித்திருந்தார். கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 21) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சோனியா காந்தி கூறுகையில், “பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சினை என்பது மிகவும் தீவிரமானது. இது காங்கிரசை மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தையே, மிக அடிப்படையில் பாதிக்கிறது. பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதி முடக்கப்பட்டு எங்கள் கணக்குகளில் இருந்து வலுக்கட்டாயமாக பணம் பறிக்கப்படுகிறது. எனினும் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொள்வோம்” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக, ரூ.285 கோடி அளவிலான பணத்தை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் மீது நிகழ்த்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை செய்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தியாவில் இவர்கள் இல்லாமல் இந்த மாதிரியான செயல்பாடுகள் நடைபெறாது. தேர்தல்களில் நம்மை முடமாக்குவதற்காக இது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எந்த நீதிமன்றமும் எதுவும் கூறவில்லை. தேர்தல் ஆணையமும் வாயை மூடிக்கொண்டிருக்கிறது. கட்சியால் ரயில் டிக்கெட்டுகளை வாங்கவும் கட்சி விளம்பரங்கள் கொடுக்கவும் முடியவில்லை” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் சட்டத்திற்கு புறம்பானது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. மறுபக்கம் காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. பணப்பற்றாக்குறை காரணமாக இந்த தேர்தலில் சரியாக போட்டியிட முடியாமல் கூட போகலாம்” என்று கூறியுள்ளார்.
பிரியா
தீவிரமடையும் குட்கா வழக்குகள்..அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குக் குறிவைத்த சிபிஐ!
விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல்: பிரேமலதா உருக்கம்!
Rain Update: இந்த மாவட்டங்களுக்கு… இடி, மின்னலுடன் மழையும் உண்டு!
அட பாவமே