காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 6) பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின் அனில் ஆண்டனி கூறும்போது, ”நாட்டுக்காக உழைப்பதே எனது தர்மம். பல காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒரு குடும்பத்திற்காக வேலை செய்வதே தங்கள் தர்மம் என்று நம்புகிறார்கள்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான மிகத்தெளிவான பார்வை பிரதமர் மோடிக்கு உள்ளது“ என்றார்.
அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ”அனில் ஆண்டனி திறமையான அரசியல் பணியாளர்” என்று கூறினார்.
இந்நிலையில், அனில் ஆண்டனி பாஜகவில் இணைந்ததையடுத்து, அவரது தந்தை மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி, பாஜகவில் இணைந்த அனிலின் முடிவு தன்னை காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஏப்ரல் 6) பேசிய அவர், “இந்தியாவின் அடிப்படை ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கம் தான். ஆனால் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து பன்முகத்தன்மையையும் , மதச்சார்பின்மையையும் திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்து, இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாஜக வினர் அழித்து வருகின்றனர்.
என்னுடைய கடைசி மூச்சு உள்ள வரை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தவறான கொள்கைகளை எதிர்ப்பேன். பாஜகவில் இணைந்த என் மகனின் முடிவு என்னை காயப்படுத்தியுள்ளது” என்று ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் பேச்சு”: ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்!
உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம்: தேர்வாளர்கள் பட்டியல் ரத்து!