நா.மணி Some new initiatives in higher education
பள்ளிக் கல்வி முடித்து, கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாளில், முதல் மணி நேரத்தில், என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? யார் வந்து வகுப்பு எடுத்தார்கள்? யோசித்து யோசித்து பார்க்கிறேன். எதுவும் நினைவில் தங்கியிருக்கவில்லை. அப்போதெல்லாம் முதலாண்டு மாணவர்களுக்கு, புதுமுக பயிற்சி வகுப்புகள் என்று ஏதுமில்லை. இப்போதும் கூட, அரசு கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், பல இடங்களில் இன்னும் இந்த பயிற்சிகள் கருக்கொள்ளவில்லை.
சுயநிதி கல்லூரிகளின் வருகைக்குப் பிறகு, இத்தகைய புதுமுக மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் அறிமுகமாகி பிரபலமாகி இருக்கின்றன. அதன் அடிப்படை வணிக நோக்கம். லாப நோக்கம். இதனையெல்லாம் தாண்டி, அத்தகைய வகுப்புகளை புறக்கணிக்க தேவையில்லை. உயர் கல்வியில், அடிப்படை தேவைகளில் ஒன்றாக இவை மாற வேண்டும்.
பொருளியல் துறையின் தனித்துவமான முயற்சிகள்: Some new initiatives in higher education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக கல்லூரியில் பொதுவாக என்ன செய்தாலும், நாம் தனியாக, பொருளாதார துறை மாணவர்களுக்கு, மூன்று நாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு அல்லது இணைப்பு வகுப்பு என்று ஏதேனும் ஒரு பெயரில் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். காலையில் ஒரு சிறிய துவக்க விழா, அதனைத் தொடர்ந்து சுய அறிமுகம், தனித் திறன்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட விபரங்கள் மாணவர்களிடம் சேகரிக்கப்படும். அத்தோடு, சமூக, பொருளாதார வாழ்நிலை குறித்தும், புள்ளி விவரங்களை சேகரித்துக் கொள்வோம். வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு அமர்வு அவசியம் இடம்பெறும். ஒரு அரை நாள் களப்பயணம். அது , ஈரோடு அருங்காட்சியகம், பெரியார்- அண்ணா நினைவு இல்லம், சிறிய தொழிற்சாலை என்று ஏதேனும் ஒரு வகையில் அது அமையும். இந்த மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு ஒரே மாதிரியாக இருக்காது. வருடத்திற்கு வருடம் மாறுபடும்.
ஒரு முறை ஓவியம் வரைவது எப்படி என்று கற்றுக் கொடுத்தோம். மற்றொரு முறை, உலகத் தரமான குறும்படங்களை போட்டுக் காண்பித்தோம். அதனை ஒட்டிய விமர்சனங்களை கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தோம். இப்படி மாறி மாறி பயிற்சிகளை அமைத்துக் கொண்டுள்ளோம். இறுதிநாட்களில் பின்னூட்டம் பெறுவோம். ஒவ்வொரு பின்னூட்டமும் மிகச் சிறப்பாகவே அமையும். மிக மிக சிறப்பு என மாணவர்கள் நெகிழ்ந்து போய் எழுதி தருவார்கள். அத்தோடு அந்த மூன்று நாள் பயிற்சி முடிந்துவிடும். அதற்குப் பிறகு வழக்கமான வகுப்பறை, பாடங்கள் தொடங்கிவிடும்.
நடப்பு கல்வியாண்டின் புதிய யுக்திகள்: Some new initiatives in higher education
நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடித்து, அதே அந்த மூன்று நாள் பயிற்சி வகுப்பை தொடங்கினோம். துவக்க விழாவில், முன்னாள் மாணவர்கள் ஐந்து பேரை அழைத்து வந்தோம். அதில் எங்கள் கல்லூரியில் முதல்முதலாக பட்டம் பெற்ற மூன்று பேரை அழைத்திருந்தோம். அவர்கள், படிக்கும் போது கல்லூரியில் என்ன படித்தார்கள்? என்ன கற்றுக் கொண்டார்கள்? என்ன கற்றுக்கொள்ள தவறினார்கள்? அப்பொழுது கல்லூரி எப்படி இருந்தது ?இப்போது எப்படி இருக்கிறது? என அனுபவ பகிர்வாக அந்த அமர்வு இருந்தது.
அக்னி முறுக்கு கம்பிகளின் உரிமையாளர்களில் ஒருவரான திரு .கே. தங்கவேலு அவர்களை துவக்க உரை ஆற்ற அழைத்தோம். கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள கூகலூரில் இருந்து , கோபி சென்று 11ஆம் வகுப்பு வரை படித்து, வாரம் 150 ரூபாய் சம்பளத்திற்கு ஈரோடு வந்து தன் வாழ்க்கையை எப்படி தொடங்கினார் என்பதில் தொடங்கி, இன்று அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தை எப்படி உருவாக்கி, நடத்தி வருகிறார் என்பது வரை மாணவர்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொண்டார். ஏழையாக பிறந்தவர்கள் கூட தொழில் முனைவோராக வளர்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கை விதைகளை மாணவர்கள் நெஞ்சில் தூவினார்.
வாசிப்பை வாழ்க்கை முழுவதும் எப்படி வசப்படுத்த வேண்டும்? என்பது பற்றி சேலம், பாலம் புத்தக நிலைய உரிமையாளர் சகஸ்ரநாமம் அவர்களோடு ஒரு உரையாடலை வடிவமைத்தோம். மாணவர்களுக்கோ 17 வயது. அவருக்கோ 67 வயது. ஆனால், தனது உரையாடல் வழியாக, அவர்களை மூன்று மணி நேரத்தில் நண்பர்களாக இணைத்துக் கொண்டார். தனது உரையாடலில், “என்னிடம் ஏராளமான நூல் தொகுப்புகள் இருக்கிறது. பெரிய நூல் நிலையத்தை எனது வீட்டில் உருவாக்கி இருக்கிறேன். அது எனக்கு பெருமையில்லை. எனது இறப்பு பற்றிய கவலை எனக்கு கிஞ்சித்தும் இல்லை. ஆனால், நான் வாங்கிய புத்தகங்களை வாசிக்காமல் இறந்து விடக்கூடாது,என்ற ஒன்று மட்டுமே என் ஆதங்கம்” என்று உரையாடலின் ஊடாக குறிப்பிட்டார். அந்த வார்த்தைகள் மாணவர்களை மிகவும் கவ்விப்பிடித்தது. வாசிப்பை மூச்சாகக் கொள்வதற்கான ஒரு தீப்பொறி அந்த வார்த்தைகள் வழியே உருவானது.
அனேகமாக, எல்லா மாணவர்களும் பொது வாசிப்போ, தினசரி செய்தித்தாள் பார்ப்பது போன்ற பழக்கம் இல்லாதவர்கள். அவர்களை, பொது வாசிப்பு என்னும் நீரோடையில் கலக்க வைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. அதற்கான வழிகளை திட்டமிட்டு கண்டறிந்து வருகிறோம்.
அடிப்படையில் அவர் ஒரு பொறியாளர். மாணிக்க சுந்தரம் என்பது அவரது பெயர். தனது பணி முழுவதும் வெளிநாட்டில். பணி நிறைவுக்கு பின்னர், ஒரு சமூக சேவகராக மாறி உள்ளார். குறிப்பாக, கிராம சபை தலையீடுகள் மூலம், எப்படி கிராம வளர்ச்சிக்கு பயன்பட முடியும் என்பதை புரிந்து கொண்டுள்ளார். இவ்வாறு சிந்தித்து தீவிரமான செயல்பாட்டாளராக விளங்கி வருகிறார். அவரையும் ஓர் அமர்வுக்கு அழைத்திருந்தோம். அவரது இயல்பான உரையாடல், மென்மையான பேச்சு, மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, கிராம ஊராட்சி மன்றங்கள், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? மக்கள், கிராம ஊராட்சி மன்றங்களை எப்படி செயல்பட வைப்பது? அதற்காக மக்கள் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்? என்பது பற்றி, அவரது உரையாடல் அமைந்திருந்தது.
பள்ளிக் கல்வி என்பது என்ன? உயர் கல்வி என்பது என்ன? இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகள் என்ன? உயர்கல்வி கற்க வந்த மாணவர்கள் இனிமேல் அறிவை எப்படி தேடி சேகரம் செய்து கொள்ள வேண்டும்? என்பதை ஒரு அமர்வில் மிகச் சிறந்த கருத்துரையாக பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் வெங்கடாசலம். இவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியராக பணிபுரிந்து, பணி நிறைவு பெற்றவர். இவர் ஓர் வீதி நாடக ஆசிரியர், கவிஞர், பாடகர், கட்டுரையாளர் இப்படி பன்முக தன்மையை கொண்டவர். அவரது கருத்துரையும் மாணவர்களை கவ்வி இழுத்தது.
புத்தாக்க பயிற்சிகளில் புதிய வெளிச்சத்தின் தேவை: Some new initiatives in higher education
மூன்று நாட்கள் பயிற்சி நிறைவடையும் முன்பு, மனதில் ஒரு பொறி தட்டியது. நாம் துறைத்தலைவராக பொறுப்பு ஏற்றது முதல், இந்த மூன்று நாள் பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில், மாணவர்கள் என்னதான் கற்றுக் கொண்டார்கள்? பயிற்சிகளின் பாதிப்பு என்னவாக இருக்கிறது? அவர்களுக்கு மனதில் என்ன தங்கியது? ஏதேனும் அணையா விளக்கு உருவாக இந்த பயிற்சி காரணமாக இருந்ததா? நமது பயிற்சிகள் புதிய வெளிச்சம் பரவ காரணமாக அமைந்ததுள்ளதா? என்ற யோசனை உருவெடுத்தது.
உடனடியாக மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் சென்று ஒரு பின்னூட்டம் பெற்றோம். “முதல் ஆண்டில் கொடுத்த மூன்று நாட்கள் பயிற்சி எப்படி இருந்தது? தற்போது அந்த பயிற்சியின் நினைவுகள் என்னவாக உங்களில் தங்கி இருக்கிறது? சுருக்கமாக அதனை எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டேன். 60 பேர் முதலாண்டில் சேர்ந்தனர். தற்போது 43 பேர் படித்து வருகிறார்கள். 17 பேர் இடைவிலகல். இந்த இடைவிலகலுக்கு காரணங்கள் குறித்து ஆராய வேண்டும். அதனைத் தனியாக ஒரு கட்டுரையாக பகிர்ந்து கொள்வோம். இப்போது படித்து வரும் 43 பேரும், சுருக்கமாக எழுதிக் கொடுத்ததை பார்ப்போம்.
42 பேருக்கும் மூன்று நாள் பயிற்சி கொடுத்தது மட்டுமே, ஞாபகத்தில் இருக்கிறது. யார் பயிற்சிக்கு வந்தார்கள்? என்ன தலைப்பில் பயிற்சி நடந்தது? என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? என எதுவும் நினைவில் இல்லை என்றார்கள். ஒரே ஒரு மாணவி மாத்திரம், “நமது கல்லூரியில், சனி ஞாயிறுகளில் நடக்கும் தமிழ்நாடு தேர்வாணைய பயிற்சி வகுப்பு எடுக்கும், அண்ணா ஒருவர் வந்திருந்தார். அவர் எப்படி தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளை எழுதி தேர்வு பெற்றார்? என்ற அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டார். நாங்கள் தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளை எப்படி அணுக வேண்டும்? எவ்வளவு படிக்க வேண்டும்? எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
அப்போது முதல், நானும் தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகளுக்காக தயாராகி வருகிறேன். இந்தப் பட்டப்படிப்பு முடிந்தவுடன், குரூப் 2 தேர்வு எழுதி, நிச்சயமாக வெற்றி பெறுவேன்” என்று எழுதிக் கொடுத்தார்.
ஆனால் பெரும்பகுதி மாணவர்களின் பின்னூட்டம், மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்தது. 2017 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து, இந்த புத்தக வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறோம். பயிற்சி முடித்ததும் எப்பொழுதும் போல பாடத்திட்ட பணிகளில் ஈடுபடுகிறோம். மாணவர்களும் அதனை மறந்து, தங்கள் வேலைகளில் மூழ்கி விடுகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்த பயிற்சி, மாணவர்களுக்கு பெரிதாக பலன் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டோம். அதனை ஒட்டிய சிந்தனையை செழுமைப் படுத்தினோம்.
வாசிப்பு வசப்படுத்தும் தொடர் முயற்சிகள்: Some new initiatives in higher education
முதலாம் ஆண்டில், முதல் மூன்று நாட்களில் இது போன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துவது நல்லது. அவசியமானது. ஆனால், அதற்கு பின்னர், பயிற்சிகளின் தொடர்ச்சியில்லாமல், மாணவர்களை திரும்பி பார்க்கும்படி செய்யாமல், மனதில் நிறுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யாமல், வளர்த்தெடுப்பதற்கு வகை செய்யாமல், அப்படியே விட்டு விடுவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தோம். அதன் அடிப்படையில், இந்த ஆண்டு நடத்திய பயிற்சியில் சிலவற்றை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
முதலாவதாக, சேலம் சகஸ்ரநாமம் அளித்த வாசிப்பை வசப்படுத்தும் புதிய யுக்திகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்று முடிவு செய்வோம். தற்போதைய மாணவர்கள், மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு முடிக்கும் வரை, மாதம் ஒருமுறை, வாசிப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு மாதமும், முதல் செவ்வாய்க்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வாசிக்க தூண்டும் உரையாடல்கள் புத்தகங்களை கொடுத்து வாசிக்க தூண்டுவது என முடிவு செய்தோம். மூன்றாண்டுகள் முடிவதற்குள், அனைவரும், பணம் செலவு செய்து, புத்தகங்கள் வாங்கி படிக்கும் சிறந்த வாசகர்களாக உருவெடுக்க வேண்டும் என்பது, எங்களது தலையாய நோக்கமாக இருக்கிறது. புத்தக விமர்சனங்களை எழுதுதல், புத்தக விமர்சனம் குறித்து பேசுதல், என்று அவர்கள் நிலைமை மேம்பட வேண்டும் என்பதை இந்த பயிற்சியின் மைய இலக்காக கொண்டுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக, முதல் வாசிப்பு மற்றும் விவாதம் வகுப்பறையிலேயே தொடங்கியது. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின், “யானை டாக்டர்” நூலை அனைவருக்கும் வாங்கி கொடுத்தோம். படித்துவிட்டு விவாதத்திற்கு தயாராக வரும்படி கூறினோம். முன்கூட்டியே புத்தகத்தை கொடுத்தும், பல மாணவர்கள் படித்துவிட்டு வரவில்லை. சில மாணவர்கள் படித்துவிட்டு வந்து, நன்கு விவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த வகுப்பு உணர்வுபூர்வமாகவே சென்றது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் பெருவாரியாக ஏழை எளிய குடும்பங்களை சார்ந்தவர்கள். சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள். எனவே, வீட்டில் செய்தித்தாள்கள் வாங்குவது, பொதுவான புத்தகங்கள் வாங்குவது, படிப்பது, என்ற பழக்கம் குறைவாகவே இருப்பவர்கள். வாசிப்பை மேம்படுத்த, செய்தித்தாளின் வாசிப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டோம்.
இதற்காக, மாணவர்களே மனம் உவந்து ஒத்துழைப்பு நல்கினார்கள். தலைக்கு ரூபாய் 100 பணம் வசூலித்து, தமிழ் மற்றும் ஆங்கில இந்து நாளிதழ்களுக்கு ஓராண்டு சந்தா செலுத்தி உள்ளனர். இந்து நாளிதழ்களை தங்கள் வகுப்பறைக்கே வரவழைத்து உள்ளனர். வகுப்பறையிலேயே வாசிப்பு தொடர்கிறது. அடுத்த ஒரு வாசிப்பு முகாமை புதுமையான முறையில் உரையாடலை, நிகழ்த்த திட்டமிட்டோம்.
இப்போதும் மாணவர்கள் எவ்வளவு வாசித்தார்கள்? எப்படி வாசித்து வருகிறார்கள்? என்பதை முழுமையாக உணர முடியவில்லை. ஆனால் நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. பல மாணவர்கள் பொது வாசிப்பை நோக்கிவர தொடங்கி உள்ளனர். வாசிப்பின் மீதான விவாதத்தை கேட்க தயாராக இருக்கிறார்கள். சில மாணவர்கள் விவாதத்தை முன் வைப்பதை பார்த்து, தாங்களும் வாசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனை இந்தப் பயிற்சி முகாமில் தெரிந்து கொண்டோம். இந்திய ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து, பணி நிறைவு பெற்றபின், வாசிப்பை முழு நேர பணியாக கொண்டிருக்கும் ராஜா என்பவரை இந்த பணிக்காக அழைத்திருந்தோம். அவரது தொடர் வாசிப்பு அனுபவங்கள், உரையாடல்கள், மாணவர்களை மிகவும் ஈர்த்தது.
இயற்கையும் வாசிப்பும்:
வாசிப்பு வெளியை, கொஞ்சம் கல்லூரிக்கு வெளியே எடுத்துச் சென்று, மாணவர்களை வாசிக்க தூண்டுவது என்று திட்டமிட்டுள்ளோம். கல்லூரியில் இருந்து, ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு மாணவர்களை இதன் நிமித்தம் அழைத்துச் செல்வது என்று திட்டமிட்டுள்ளோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கலை போன்றது அல்ல. என்றாலும், தினமும் கூட பறவைகளை பார்க்கவும், மகிழவும் ஏற்ற இடம். ஏராளமானவர்கள் வந்து செல்லும் சரணாலயம். இதனை முதல் வாசிப்பு முகாம் நடத்தும் இடமாக தேர்வு செய்துள்ளோம். காலையில் 6 மணிக்கு மாணவ மாணவிகள் சரணாலயம் வந்துவிட வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் இதனை ஒருங்கிணைப்பு செய்து தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.
காலை 6 மணி முதல் 8 மணி வரை பறவை நோக்கல். 8 முதல் 9 மணி வரை காலை உணவு. 9 மணி முதல் ஒரு மணி வரை “பூமி யாருக்கு சொந்தம்?” என்ற நூல் வாசிப்பு. செ.கா எழுதியுள்ள, இந்த நூல் இயற்கை, சூழலியல் கட்டுரை தொகுப்பு. மாணவ மாணவிகள் ஆவலோடு காத்திருக்கின்றார்கள். நாங்களும் தான். Some new initiatives in higher education
இத்தகைய புதிய முயற்சிகளுக்கு பின்புலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்னும் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, 20 ஆண்டுகள் பாடம் கற்றுக் கொண்ட அனுபவமும் கை கொடுக்கிறது. ஆனால், இதுவே இந்த வெற்றிக்கு காரணம் அல்ல. துறைப் பேராசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்பே இதற்கு பெரும் காரணம். அத்தோடு, முதலாம் ஆண்டு பட்ட வகுப்புக்கு ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அருள்ஜோதி உதவி பேராசிரியரும் ஓர் முக்கிய காரணம். நாம் திட்டமிட்டு கொடுக்கும் அனைத்தையும், தேதி வாரியாக, நாள் பிசகாமல் முன்னெடுத்து வருவதும் இதன் வெற்றிக்கு காரணம். முதலாம் ஆண்டு புத்தாக்க பயிற்சி விளைவுகளின் தொடர்ச்சி இத்தோடு நிறைவு பெற்று விடவில்லை. வரும் வாரங்களிலும் அதனை தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்வோம்.
கட்டுரையாளர்:
நா.மணி
பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு. மேனாள் முதல்வர் தமிழ் நாடு அறிவியல் இயக்கம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திகை தீப திருவிழா: 2,700 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
மிகவும் சிறப்பாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் தங்கள் தொடர் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் 🎉. இப்படியான முயற்சிகள் தான் பொருண்மை மிகுந்த சமுதாயத்திற்கு வழிவகுக்கும். பள்ளிகளிலும் கூட வாசிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பது தான் எதார்த்தம். பெரும்பாலான கல்லூரிகளிலும் கூட பொது வாசிப்பு என்பதை பேராசிரியர்களே அறிந்து கொள்ள முன்வருவதில்லை. அதே போல் பள்ளிகளிலும் ஆசிரியர்கள். அந்த வகையில் நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த முயற்சி பல நல்ல விளைவுகளை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. 2009 ஆம் ஆண்டு உங்கள் கல்லூரி மாணவர்களுடன் வாசிப்பு குறித்து உரையாட இதே போன்ற ஒரு வாய்ப்பை எனக்கு அளித்தீர்கள். மறக்க முடியாத தருணம் அது. பசுமையாக இன்றும் நினைவில் உள்ளது. பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள்.🎉🎉🎉