பெரியார் உருவாக்கிய சமூக ஓர்மை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

புனித பாண்டியன்

தனிமனிதனின் விருப்பமாகவும் தேர்வாகவும் இருக்க வேண்டிய கடவுளையும் மதத்தையும் அரசியலில் முன்னிறுத்தி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் பரப்புரை செய்த பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இத்தகைய மதவாத அரசியல் செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு மட்டும் இடம் கொடுக்கவில்லை என்பது, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டின் இத்தகைய தனித்துவமான தன்மைக்கு – திராவிடக் கட்சிகளின் நிலைப்பாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும் – அரை நூற்றாண்டுக் காலம் திராவிடக் கருத்தியலுக்குச் சமூக உரமிட்டு, இம்மண்ணையும் மக்களையும் பண்படுத்திய பெரியாரே முதன்மைக் காரணமாகிறார். 

பிற மாநிலத்தவரைப் போல, கோயில்களும் கடவுள் நம்பிக்கையும் சாதியும் தமிழர்களைப் பெருமளவு ஆட்கொண்டிருந்தாலும் பெரியாரின் பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமூக நீதிப் பிரச்சாரங்கள் எந்த வகையிலும் மதங்களுக்கிடையிலான  வெறுப்பையோ, சாதிகளுக்கிடையிலான பகையையோ உருவாக்கிடவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மதச்சிறுபான்மையினருக்கிடையே இணக்கத்திற்கும் சமூக ஓர்மைக்கும் வித்திட்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குப்  பெரியார் அளித்துள்ள மகத்தான பங்களிப்பு இது! 

சாதி ஒழிப்புக்கு தீவிரம்…

பெரியார் உருவாக்கியுள்ள சமூக ஓர்மையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டால்தான் எதிர்வரும் காலங்களிலும் மதவாத அரசியலை முறியடிக்க இயலும். இந்திய மக்கள் அரசியல் முரண்களாலோ, மத வேறுபாடுகளாலோ பிளவுற்று இருப்பதை முதன்மை முரணாக பெரியார் கருதவில்லை. அவர்கள் சாதிகளால் பிளவுண்டு இருப்பதையே முதன்மைச் சிக்கலாகக் கண்டறிந்தார். அதனால்தான் இந்திய சுதந்திரத்திற்கானப் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்ற காலத்தில் இருந்து தம்முடைய இறுதிக்காலம்வரை, அவர் அரசியல் முரண்களைக் களைவதற்கு முன்னுரிமை அளிக்காமல் சாதிகளால் பிளவுற்ற மக்களை ஓர்மைப்படுத்தவும் வர்ண – சாதி ஒழிப்புக்கான செயல்திட்டங்களையுமே தீவிரப்படுத்தினார். 

மொழி, மத வேறுபாடுகளோ அல்லது வடநாடு – தென்னாடு என்கிற அரசியல் எதிர் நிலையோ இந்தியாவின் அடிப்படைச் சிக்கல் அல்ல. மக்கள் அவ்வாறு பிரிந்து நிற்கவுமில்லை. ஏனெனில் எவர் விரும்பினாலும் ஒரு மொழியைக் கற்க முடியும்; மதங்களை மாற்றிக் கொள்ள முடியும்; வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ முடியும். ஆனால் மாற்றிக்கொள்ளவே முடியாத சாதி முரண்களே இங்கு அடிப்படையானவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த மொழியைப் பேசுபவர்களாக இருந்தாலும் – ஒரே மொழியைப் பேசி, ஒரே மாநிலத்தில் வசிக்கும், ஒரே மதத்தைச் சார்ந்துள்ள மக்களை – சாதிதான் பிரிக்கிறது. 

கல்வி, பொது வளங்கள், அதிகாரம், அரசை நிர்வகிப்பதில் உரிய பிரதிநிதித்துவம் போன்றவை சம அளவில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப் படாததற்கு சாதிய சமூக அமைப்புதான் பெரும் தடையாக நிற்கிறது. இச்சமூக முரண்கள் எந்த மாநிலத்திலும் தீர்க்கப்படாததால்தான் கல்வியின்மை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, சுகாதாரச்சீர்கேடு என சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கடும் இன்னல்களைச் சந்திக்கின்றனர். நீரையும் நிதியையும் அதிகாரத்தையும் பங்கிட மறுக்கும் மாநிலங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ் நிலையில் எவ்வித மேம்பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களை  சாதியச் சிக்கலில் இருந்து மீட்டாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெரியார் கடவுளையும் மதத்தையும் நொடி தோறும் கேள்விக்குள்ளாக்கினார். சாதியும் இந்து மதமும் பின்னிப் பிணைந்தவை. மதத்தின் அங்கீகாரமின்றி சாதியால் தனித்து இயங்க முடியாது. அதேபோல, சாதிகளின் ஒருங்கிணைப்பே இந்து மதம். சாதியை நேரடியாக நியாயப்படுத்த முடியாததால்தான் மதத்தைத் திரையாகப் பயன்படுத்துகின்றனர். 

சாதி, தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளால் துன்புறும் மக்களுக்கு எவ்விதத் தீர்வையும் கொண்டிராத மதவாதிகள், அம்மக்களை மத ரீதியாக ஓர்மைப்படுத்த முனைவதன் விளைவு, மத அடையாளங்களைச் சுமக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், பிற மதத்தினருக்கு எதிரானவர்களாக நிறுத்தப்படும் ஆபத்து நேர்கிறது.

சாதிய முரண்களில் இருந்து தப்பித்து பிற மதங்களைத் தழுவினாலும் மீண்டும் மத முரண்களுக்குள் அம்மக்களைச் சிக்க வைக்கும் மதவாத சூழ்ச்சிதான் இந்தியப் பிரிவினைக்கு முன்பிருந்தே அரங்கேறி வருகிறது. ஆனால் இந்நாட்டின் மதச்சிறுபான்மையினரில் பெரும்பாலானோர் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் சாதி இழிவைச் சந்தித்த சகோதரர்களே என்கிற வரலாற்று உண்மையை – தம்முடைய நேர்மறையான பரப்புரையால் பெரியார் உணர்த்தியதன் விளைவால் ஏற்பட்ட பிணைப்பே – இன்று வரை மதவாதிகளின் சூழ்ச்சியைத் தகர்க்கும் அரணாக தமிழ் மண்ணைக் காக்கிறது. அதுமட்டுமல்ல, மதவாத அரசியல் சாதியை மென்மேலும் பலப்படுத்துகிறது என்பதால்தான் பெரியார் சாதியையும் மதத்தையும் ஒரு சேர எதிர்த்தார். சாதிக்கு ஆதாரமான மதத்தை விமர்சிக்காமல் சாதி இழிவையும் தீண்டாமைக் கொடுமைகளையும் பட்டியலிட்டுக் கொண்டிருந்தவர் அல்ல அவர்.

இந்து தேசியத்திற்கு வேட்டு!

இந்தியத் தேசியம் இந்து தேசியத்திற்கே வழிவகுக்கும் என்பதை முளையிலேயே கண்டறிந்த பெரியார் – பெரும்பான்மை மக்களின் நலன்களை எதிரொலிக்காத – அத்தகைய தேசியத்தால் ஊறு நேரும் என்பதால்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தேசியக் கொள்கையாக்கினார்.

இக்கோட்பாடு சாதி, மதம் மற்றும் தமிழ்த்தேசிய எல்லைகளையும் புறக்கணித்து நிற்பதால்தான் இன்று இந்திய சமூக நீதியின் சின்னமாகப் பெரியார் போற்றப்படுகிறார். தவிர, மொழிவழி தேசியங்களின் மூலம் காலூன்றத் துடிக்கும் இந்து தேசியத்திற்கும் முன்னெச்சரிக்கையாக பெரியார் வேட்டு வைத்துள்ளார் எனபதும் கவனிக்கத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆனால் நாட்டின் நீர் வளங்களைப் பங்கிட்டுக் கொள்வது, வரி விதிப்புகளில் காணப்படும் பாகுபாடுகள், மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் உள்ள பாரபட்ச அணுகுமுறை, மாநிலத் தன்னாட்சி உரிமை, இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆளுநர்களின் எதேச்சதிகாரம்போன்ற அரசியல் முரண்கள்தான் சுதந்திர இந்தியாவில் அன்றாடம் விவாதிக்கப்படுகிறதே தவிர, சமூகச் சிக்கல்கள் விவாதிக்கப்படுவதில்லை.

தற்போதுதான் சமூக நீதி, சாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றவை இந்திய அளவில் விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளன. அதனால்தான் மதவாத அரசியலின் செல்வாக்கு, அவர்களுடைய ‘கடவுள் அவதரித்த தேச’த்திலேயே குறைந்திருக்கிறது. இருப்பினும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்து, தனியார் துறையில் இட ஒதுக்கீடுக்கான சட்ட ஏற்பாடு, ஒன்றிய / மாநில அரசுப் பதவிகளில் நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்கள், அய்.அய்.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்துவது ஆகியவை விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டை பெரியார் நாள்தோறும் ஒரு விவாதப் பொருளாகவே வைத்திருந்ததன் மூலம் அதற்கு ஊறு நேராமல் பார்த்துக் கொண்டார். 

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்காத பெரியார், அவர் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தும் மதவாதம் அரசியலை நெருங்காதவாறு திராவிட அரசியலின் திசைவழியைத் தீர்மானிப்பவராகவும், திராவிட அரசியலின் தனித்துவமான வெற்றிக்குக் காரணமாகவும் திகழ்கிறார். இதைப் புரிந்து கொண்டு மதவாத தேசியத்திற்கு எதிரான பெரியாரின் சமூக ஓர்மை மாநில, மொழி எல்லைகளைக் கடந்து நாள்தோறும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அது, சமூக நீதி, திராவிடம் என்கிற குறியீட்டுச் சொற்களோடு நின்று விடுவது அல்ல; அதன் உள்ளார்ந்த, பரந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். திராவிடம் என்றால் என்ன என்று பெரியார் அற்புதமாக விளக்குகிறார்.

“நான் நம்மை திராவிடர் என்பது திராவிடர் – ஆரியர் என்று உடல் கூறு சாஸ்திரப்படி பரீட்சித்து அறிந்து பிரித்துப் பேசுவதாகக் கருதாதீர். நம்மை இன்றைய இழிவிலிருந்து – தாழ்மையிலிருந்து முன்னேற முடியாமல் செய்யும் முட்டுக்கட்டையிலிருந்து மீண்டும் தாண்டிச் செல்ல, நமக்கு ஒரு குறிச்சொல் வேண்டும். இது நம்மை இழிவிலிருந்து விடுதலை செய்து ஒரு முற்போக்கை, ஒரு பயனை அடைதலை, ஒரு மீட்சியைக் குறிப்பிட ஏற்படுத்தி இருக்கும் சொல் ஆகும். ஆதலால் வார்த்தையின் பேரில் வழக்காட வேண்டியதில்லை. திராவிடம் என்பது என்ன மொழியாய் இருந்தால் என்ன? அவ்வளவில்தான் பார்க்க வேண்டும். இந்துக்கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து மீளுவதற்கு ஒரு அறிகுறி மொழி; அவ்வளவில் தான் அதைக் கருத வேண்டும்” (‘விடுதலை’ 26.07.1970).

அரசியல் ஓர்மையை வளர்த்தெடுக்கப் பயன்படும் ‘தமிழன்’ என்கிற அடையாளம், சாதியொழிந்த சமூக ஓர்மைக்கு வித்திடாததால்தான் ‘திராவிடம்’ என்கிற கோட்பாடு பெரியாரால் முன்மொழியப்பட்டது. அதேபோல, இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவ உரிமையை மட்டுமே வழங்கும்; சாதியை ஒழிக்காது என்பதால்தான் சமூக நீதிக் கோட்பாடு அதன் உள்ளார்ந்த பொருளுடன் – சாதியை அழித்தொழிக்கும் நோக்கோடு – உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அம்பேத்கரும் பெரியாரும் இணையும் புள்ளி அதுதான். இந்திய அளவில் மதவாத அரசியலை வீழ்த்துவதற்கான செயல்திட்டம் அந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது

கட்டுரையாளர் குறிப்பு: புனித பாண்டியன் ‘தலித் முரசு’ ஆசிரியர். பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் பற்றிய முக்கியமான பல கட்டுரைகள் எழுதியவர்.  அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம்  செய்வதிலும் பெரியாரின் சிந்தனைகளை   இந்தி மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதில்  தீவிர முனைப்பு கொண்டவர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதல்நாளிலேயே ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளி!

சாதிவாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *