”மாற்றம் என்பது ஒரேநாளில் நிகழக்கூடியது அல்ல” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய ‘கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’ மற்றும் தமிழ்நாடு திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா இன்று (டிசம்பர் 24) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நடைபெற்றது.
இந்த இரு நூல்களையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நூல்களின் முதல் பிரதிகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில், முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நூல்களின் பதிப்பாசிரியரும் கவிஞருமான இளையபாரதி வாழ்த்துரை வழங்கினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய ‘கலைஞர் மு.கருணாநிதி வரலாறு’ நூல் குறித்து இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர் என்.ராம் பேசினார்.
தமிழ்நாடு திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ நூல் குறித்து மாநில திட்டக்குழு முழுநேர உறுப்பினர் ஆர்.சீனிவாசன் பேசினார்.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாளர். சில பத்திரிகையாளர்கள் முதல்வராக இருக்கும்போதுதான் நெருக்கமாக இருப்பார்கள். நெருங்கி வருவார்கள். பன்னீர்செல்வன் அப்படிப்பட்டவர் அல்ல.
தலைவர் கலைஞருக்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ, அவர் மீது எப்போதெல்லாம் விமர்சனங்கள் பாய்கிறதோ, அதற்குப் பதில் சொல்வதற்கு முன்வரக்கூடிய ஒரு பேனா போராளிதான் இந்த பன்னீர்செல்வன்.
நடுநிலையான பத்திரிகையாளர் என்ற போர்வையிலே திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி எழுதுவதே தங்களுடைய பணி என்றும், அதனால் சிலரிடம் கிடைக்கக்கூடிய அங்கீகாரம்தான் தமக்கு வாழ்நாள் பாராட்டு என்று நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் உண்டு. எந்தக் காலத்திலும் உண்டு.
அப்படிப்பட்ட காலத்தில் நேர்மறையாக, பார்த்து எழுதி நடுநிலையானவர்கள் மனதில் திராவிடம் கொடுத்த சரியான பாதையை விதைக்க பன்னீர்செல்வத்தின் எழுத்துகள் பயன்பட்டிருக்கின்றன. தொடர்ந்து பயன்பட இருக்கின்றன. தலைவர் பற்றி எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. அவற்றில் நிச்சயமாக இந்த நூலும் இடம்பிடித்துள்ளது. ஏனென்றால் இது விமர்சன பார்வையுடன் அமைந்துள்ளது.
அதுபோல் ஜெயரஞ்சன் போன்ற ஏராளமான சிந்தனையாளர்கள் தேவை. அரசின் கொள்கை வகுப்பிற்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவராக ஜெயரஞ்சன் உள்ளார்.
பொய், அவதூறுகளை கூறி திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துவோருக்கு, உண்மைகளை உரக்கச் சொல்பவர் ஜெயரஞ்சன். கலைஞர் உருவாக்கி கொடுத்த திட்டங்கள் சமூக மாற்றத்துக்கு வழிவகுத்ததை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார், ஜெயரஞ்சன்.
இவர்கள் எழுதியிருக்கும் இரு நூல்களும் அறிவு கருவூலங்கள், போர் வாள்கள். திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே திராவிடத்தால் விளைந்ததுதான். மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழக்கூடியது அல்ல, மாற்றத்தை நோக்கி நாம் உழைக்கிறோம்.
தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்திலும், ஆங்கிலப் புத்தகங்களை தமிழிலும் வெளியிட வேண்டும். அதுதான் உங்களுக்கு இருக்கும் பெரும் கடமை. எனவே இந்த நூல் வெளியீட்டு விழா என்பது உங்களுடைய அறிவுப் பணியின் தொடக்கக் காலம்தான். உங்களது அறிவுப் பணியை நீங்கள் இருவரும் இதே வீரியத்தோடு தொடர வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
கிறிஸ்துமஸ் பயணம்: போக்குவரத்து நெரிசல்!
“அரசை விட தனியார் நிறுவனங்கள் நல்ல சம்பளம் தரும்” – உதயநிதி ஸ்டாலின்