மத்திய அமைச்சரைக் காணவில்லை என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ள போஸ்டருக்கு ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங், பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் தெரிவித்தது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனம் மற்றும் இந்திய மாணவர் அமைப்பு ஆகியவை கூட்டாக இன்று (மே 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பாஜக எம்பியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனிடையே காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று போஸ்டரை பதிவிட்டது.
இந்த பதிவை ரீட்விட் செய்துள்ள ஸ்மிருதி இரானி, ”அமேதி மக்களவை தொகுதியில் உள்ள சிர்சிரா கிராமத்திலிருந்து கிளம்பி தரம்பூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். முன்னாள் எம்.பி.யை தேடினால் அமெரிக்காவை தொடர்புகொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
தனது சொந்த தொகுதியான அமேதியில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் மோடி சமூகம் குறித்து அவதூறாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
தற்போது ராகுல் காந்தி ஆறுநாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் பிரதமர் மோடியை பற்றிப் பேசிய ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சுரானா குழுமத்தின் ரூ.248 கோடி முடக்கம்!
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்!