சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 20) விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி இன்று (ஏப்ரல் 20) லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலரான ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லயோலா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 156 கேமராக்கள் பொருத்தப்பட்டு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோன்று, குயின் மேரிஸ் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் மூலம் அந்த அறை தொடர் கண்காணிப்பில் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து பகுதிகளும் ஜூன் 4ஆம் தேதி வரை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கண்காணிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சென்னை புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.
ஆனால், நகர்ப்புறத்தில் உள்ள பொதுமக்கள் வாக்களிக்க அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாகவே சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்தது.
ஜனநாயக கடமையை ஆற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். 2019ல் நடைபெற்ற தேர்தலை விட 2024 தேர்தலில் 4 சதவீத வாக்குகள் அனைத்து இடங்களிலும் சராசரியாக குறைந்துள்ளது.
தென்சென்னையில் 2019 தேர்தலில் 64% வாக்குகள் பதிவாகி இருந்தது, தற்போது 60% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் கடந்த முறை 58% சதவீதமாக இருந்தது தற்போது 54% உள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: குறைந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?
தஞ்சையில் களைகட்டிய பெரியகோவில் சித்திரை திருவிழா!