அதிமுக மாநாட்டில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி குறித்து அவதூறாக பாட்டு பாடியவர் மீதும், அதிமுகவினர் மீதும் திமுக சார்பில் தென்காசி, மதுரை என தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக மாநாடு கடந்த 20ஆம் தேதி மதுரையில், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் மேடையில் இருக்கும் நேரத்தில் பாடல் பாடிய ஒருவர் திமுக எம்.பி.கனிமொழியை பற்றி அவதூறாக பாடினார்.
இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து வரும் திமுகவினர் போலீசாரிடமும் புகார் அளித்து வருகின்றனர்.
தென்காசி, நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்ட திமுகவினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
மதுரை பாண்டியன்நகரைச் சேர்ந்த திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர் இளமகிழன், மதுரை சரக டிஐஜியிடம் அளித்துள்ள புகாரில், “20.08.2023 அன்று மதுரை வலையங்குளம் பகுதியில் அதிமுக நடத்திய மாநாட்டு பந்தலில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடலுடன் கூடிய பாடல் நிகழ்ச்சி ஒன்றில், அதில்பங்குபெற்று பாடல் பாடிய ஒருவர் எங்கள் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக துணை பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கனிமொழி கருணாநிதியின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலும், அவப்பெயர் உருவாகும் வகையிலும், மிகவும் தரம் தாழ்ந்த முறையில் பாடல் பாடி அவரது பெயருக்கு பங்கம் மற்றும் களங்கம் ஏற்படும் வகையில் பொது மேடையில் பலரின் முன்னிலையில் நடந்து கொண்டார்.
மேற்படி செயலினை மாநாட்டில் ஏற்பாட்டாளர்களான அ.தி.மு.கவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, செல்லூர்.கே.ராஜு இச்செயலை முன் கூட்டியே திட்டமிட்டு அரங்கற்றியுள்ளனர்.
இதனால் எங்கள் கட்சிக்கும் எங்கள் கழக துணை பொதுச் செயலாளருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெண்ணை களங்கம் ஏற்படும் வண்ணம் அவதூறான பாடல் வரிகளை பலரின் முன்னிலையில் பாடியுள்ளார். அவரை அவதூறு பரப்ப தூண்டி பொது மேடையில் பாட வைத்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த விழா ஏற்பாட்டாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி. ஆர்.பி.உதயகுமார். வி.வி.ராஜன் செல்லப்பா, செல்லூர் கே.ராஜு ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த புகாரோடு அவதூறாக பாடிய வீடியோவையும் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார் வழக்கறிஞர் இளமகிழன்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பெண்களை களங்கப்படுத்தத்தான் மாநாடு நடத்தினாரா. இவர்கள் வீட்டு பெண்களை களங்கப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா. மாநாட்டில் ஒரு பெண்ணை ஏன் இழிவுப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். விசாரிப்பதாக போலீசார் கூறியிருக்கின்றனர்” என்றார்.
இதுபோன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.டி.சம்சானிடமும் திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.ஆணையர் ஏ.எஸ் குமாரியிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் அணி நிர்வாகிகள், “கனிமொழியை தரக்குறைவாக பேசியவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
இது குறித்து மகளிர் அணி சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தனர்.
பிரியா
அதிமுக பொதுச்செயலாளர் பதவி : சசிகலா மேல்முறையீட்டு மனு விசாரணை!
யுபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் பாஸ் பண்ண முடியுமா?: உதயநிதிக்கு அண்ணாமலை சவால்!
இளம் விதவைகளை கேவல படுத்தி விட்டார்களா?;