ஆறு மணி நேர விசாரணை! நாளை மீண்டும் ஆஜராகும் சோனியா !
நேஷனல் ஹெரால்டு வழக்கில் 2 வது முறையாக இன்று ( ஜூலை 26 ) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நாளிதழ் கடும் பொருளாதார நெருக்கடியால் 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர் 2016 இல் நேஷனல் ஹெரால்டு நாளிதழை மீண்டும் வெளியிட்டனர். அப்போது அதன் பங்குதாரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் , நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை ஜூன் மாதம் 8 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்ததால் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் , ஜூலை 21 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியது. இதையடுத்து, ஜூலை 21 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையே, ஜூலை 26 ஆம் தேதி ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது .
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று ( ஜூலை 26 ) 2 வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நேரில் ஆஜரானார். சோனியா காந்தியிடம் சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு பங்குகள் தொடர்பான கேள்விகளை அதிகாரிகள் சோனியா காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்களை பதிவுசெய்து கொண்டனர். சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நாளையும் ( ஜூலை 27 ) ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து நாடு முழுதும் நாளையும் போராட்டம் நடத்த காங்கிரஸார் முடிவு செய்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்-