அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா என்று சி.வி.சண்முகத்தை பார்த்து அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். Sivashankar attack on CV Shanmugam
விழுப்புரத்தில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று அழைப்போம். ஆனால் இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அவரை சந்திக்கு மாணவ, மாணவிகள் அப்பா என்று அழைக்கின்றனர்.
இதை உங்களில் ஒருவன் தொடரிலும் ஸ்டாலின் சொல்லியிருந்த நிலையில் சி.வி. சண்முகம் இவ்வாறு பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.
’’அம்மா… அம்மா..’’ என அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு ’’சின்னம்மா இல்ல…எங்க அம்மா’’ என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார்.
அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.
மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது.
குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து ’’நன்றி அப்பா’’ என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.அதனால்தான், அருவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Sivashankar attack on C.V. Shanmugam