சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மூன்று நாட்களுக்குள் தமிழக டிஜிபி தெரிவிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையாகின.
இந்நிலையில் , குஷ்பு கண்ணீர்மல்க பேட்டி ஒன்று அளித்தார். அதில், “பெண்கள் பற்றி அவதூறாகப் பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது… கலைஞர் இருந்தபோது திமுக இப்படி இல்லை.
இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு கலைஞரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து தவறாகப் பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சு குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவிருக்கிறது. உங்கள் வீட்டுப் பெண்களை இப்படிப் பேசுவீர்களா…
உங்கள் மொழியிலேயே என்னால் பதில் கொடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குச் சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
இது போன்ற செயல்கள் சரியா… இதுதான் திராவிட மாடலா… என்னைச் சீண்டிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்” என்றார்.

இதனிடையே, திமுக தலைமைக்கழகம், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று உத்தரவிட்டது.
பின்னர், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திமுக வில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை மூன்று நாட்களுக்குள் கட்டாயம் தமிழக டிஜிபி தெரிவிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் இன்று(ஜூன் 19 ) அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிக்கலில் மாமன்னன்: உதயநிதியுடன் மீண்டும் மோதும் தயாரிப்பாளர்
அமைச்சரின் குடும்பத்திற்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!