ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அண்ணாமலை குறித்து தரக்குறைவாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து இன்று (ஜனவரி 14) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் 128வது வட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று திமுக சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அருவருக்கத்தக்க விதமாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்கட்சியினர் மட்டுமின்றி, திமுகவைச் சேர்ந்தவர்களும் கூட கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி, இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளித்தார்.
அதேபோல் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக தமிழ்நாடு டிஜிபிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
”தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது”- சு.வெங்கடேசன் எம்.பி
”எஸ்.பி.ஐ முதன்மை தேர்வு தேதியை மாற்ற முடியாது!” : மத்திய அரசு கறார்