ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து!

Published On:

| By Aara

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட  நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். Sivaji Family Property Issue stalin

வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க சிவாஜி பேரன் மறுத்தார்.

இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53 ஆயிரம் சதுர அடியில், 13 ஆயிரம் சதுர அடியை ஜப்தி செய்து  பொது ஏலமிட்டு பணத்தை அந்நிறுவனத்துக்குக் கொடுக்க உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 3)  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சிவாஜிக்கு நெருக்கமானவர்களோ சிவாஜி குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை இரு வருடங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலினிடம் சென்றது. அப்போது முதல்வர் சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்று சிவாஜி குடும்பத்தினர் செயல்படுத்தவில்லை.  அதனால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது,   “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள்.  மகள்கள் இருவரும் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்,  தந்தை சிவாஜி கணேசன் தன் உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களில் எங்களுக்கு பங்கு கொடுக்க எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு மறுக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே…  சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் இன்னொரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும்  என்றும் இன்னொரு வழக்கு போட்டனர்.

அதாவது, சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு  ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனர், அங்கே கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர்.  

இந்த  மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.  இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே  முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது இதை எழுப்பியிருக்கிறார்கள் என்றும்   இதை வாங்கிய அக்‌ஷயா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாதாடியது.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. Sivaji Family Property Issue stalin

அதேநேரம் சொத்துப் பிரச்சினைக்காக பிரதான வழக்கு தொடர்ந்து நடந்தது.

”சென்னை தி. நகரில் இருக்கும் சிவாஜி இல்லமான அன்னை இல்லம் சிவாஜியால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் ராம்குமாரும், பிரபுவும் அங்கே வசிக்கிறார்கள். அன்னை இல்லத்தில் எங்களுக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை.  கோபாலபுரத்தில் இருக்கும்  சிவாஜி என்கிளேவ் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும்.

மேலும் சென்னை ராயப்பேட்டையில் சிவாஜி நான்கு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டில் நாங்கள் (மகள்கள்) வசிக்கிறோம். மற்ற மூன்று வீடுகளின் வாடகையும் ராம்குமார், பிரபுவுக்குத்தான் போகிறது. அந்த வாடகையிலும் பங்கு கொடுக்கப்படவில்லை.

அசையா சொத்துகள் மட்டுமல்ல… அசையும் சொத்துகளான  சிவாஜிக்கு சொந்தமாக ஆயிரம் சவரன் தங்க நகைகளும், 500 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. இவற்றிலும் எங்களுக்கு பங்கு வேண்டும்” என்பதுதான் சிவாஜி மகள்களின் வழக்கு.

சிவாஜி உயிரோடு இருந்தபோது, நடிகர் நடிகைகளின் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சிவாஜி மறைவுக்குப் பின்  அவரது குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினை தலை விரித்தாடிய தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. Sivaji Family Property Issue stalin

2022 அக்டோபர்  1 ஆம் தேதி சிவாஜியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் இருக்கும் சிவாஜி மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.  

அப்போது ராம்குமார், பிரபு உள்ளிட்டோருடன். சில நிமிடங்கள்  முதல்வர் தனியாக உரையாடினார்.  

இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சாந்தி தியேட்டர் பங்கு வழக்கில்  உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தது.  இதற்கு சில நாட்கள் கழித்து பிரபுவின் வழக்கறிஞரான எஸ்.ராமனிடம் முதல்வர் தரப்பில் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

அப்போதே முதல்வர் ஸ்டாலின் தனக்குத் தெரிந்த சில பில்டர்ஸ் நிறுவனத்தினரிடம் இதுபற்றி பேசிவிட்டு… முக்கிய ஆலோசனைகளை சிவாஜி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தனது தந்தை கலைஞரின் உற்ற நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் சிவாஜி குடும்ப பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் முயன்றார்.

ஆனால் சிவாஜி குடும்பத்தினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் முதல்வர் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப் படி செயல்பட்டிருந்தால் இன்று அன்னை இல்லம் ஏலத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது” என்கிறார்கள் நடந்ததை அறிந்த இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share