யூகங்களின் அடிப்படையில் தனிநபர் பயனடையும் வகையில் தனி நீதிபதி, தீர்ப்பு வழங்கி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
ஈபிஎஸ் மேல்முறையீடு
ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என்றும் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனத்தை எதிர்த்தும் ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.
தலா 1 மணி நேரம் வாதம்
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று(ஆகஸ்ட் 25) தொடங்கியது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அரிமாசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், விஜயநாரயண் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த்பாண்டியன் உள்ளிட்டோரும் ஆஜராகியிருக்கின்றனர்.
அனைத்து தரப்பினரும் தலா ஒரு மணி நேரம் வாதம் செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
தனி நீதிபதி முடிவு தவறானது
எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.
அதில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. யூகங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஜூலை 1ல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே தனி நீதிபதியின் தீர்ப்பின் முடிவு தவறானது.
அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளதும் தவறானது.
யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதி உத்தரவு உள்ளது.
கட்சியினர் ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.
தனி நீதிபதி ஜெயசந்திரன் தனது தீர்ப்பில், ஓ.பி.எஸ் என்ற தனி நபர் பயனடையும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயனடையும் வகையில் இல்லை.
பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல்
2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கையை ஏற்றுதான் ஜூன் 23ம் தேதி அன்று, அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வர 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.
எடப்பாடிக்கு 2539 பேர் ஆதரவு
இதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது நிரூபணமாகியுள்ளது.
கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அமைப்பு என்பதால் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை என கூற முடியாது.
மேலும் ஜூன் 23 ம் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கவில்லை என்று வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தை எடுத்து வைத்துள்ளார்.
கலை.ரா