10 மணிக்கு மேல்… தொடர்ந்து அத்துமீறும் அண்ணாமலை

அரசியல்

கோவையில் நேற்று (ஏப்ரல் 14) இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ள கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே ஏப்ரல் 11-ஆம் தேதி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10.40 மணிக்கு பிரச்சாரம் செய்ததாக, அண்ணாமலை மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், நேற்று இரவு கோவை சூலூர் பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். இரவு 10.30 மணிக்கு தனது திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் சென்றுள்ளார். அவரது வாகனத்தை பின்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாஜக தொண்டர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். மேலும், சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து அண்ணாமலை கை அசைத்து வணக்கம் செலுத்தியுள்ளார்.

அப்போது அண்ணாமலை வாகனத்தை மறித்த போலீசார், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை என்று அவரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு அண்ணாமலை, “நான் பிரச்சாரம் செய்யவில்லை, பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு தான் செல்கிறேன்” என்று கூறினார்.

அப்போது அவரை மாற்றுப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த பாஜகவினர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டனர். இதனையடுத்து தொண்டர்களுடன் சேர்ந்து அண்ணாமலை சாலை மறியலில் ஈடுபட்டார். அவருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அண்ணாமலை அங்கிருந்து தனது வாகனத்தில் சென்றார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அற்ப காரணங்களுக்காக மீண்டும் ஒருமுறை எங்கள் பிரச்சார வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் மூலம் திமுகவின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை என்று எங்கள் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை, எங்கள் வாகனத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டன. வாகனம் கடந்து செல்லும் பாதையில் கூடியுள்ள 2000 தொண்டர்களை சந்திக்க விரும்பினோம்.

ஆனால், காவல்துறை அதிகாரிகள் இதற்கு அனுமதிக்கவில்லை. அவர்களது நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு புறம்பாக உள்ளது என்று விளக்கினோம். இருப்பினும் எங்களை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக திமுகவின் தவறான ஆட்சிக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீன்கள் விலை உயரும்: இன்று முதல் மீன்பிடி தடைக்காலம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *