திருடு போனதாக கூறப்பட்ட வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்திலேயே இருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு நடந்து கொண்டிருக்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று கைப்பற்றினார் ஓ.பன்னீர் செல்வம்.
இதனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் தரப்புக்கிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனால் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் சீலை அகற்றினார்.
அப்போது, அலுவலகத்தில் இருந்த பல முக்கிய ஆவணங்கள் மாயமாகியிருப்பதாக தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வெள்ளி வேல் மற்றும் செங்கோல்கள் உள்ளிட்டவையும் திருடு போய் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ராயப்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட பின்னரும் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று சி.வி.சண்முகம் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்தச்சூழலில் இன்று காலை முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சென்ற 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருடுபோனதாக சி.வி.சண்முகம் கூறிய வெள்ளி வேல் அதிமுக அலுவலகத்திலேயே இருப்பதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அலுவலக பிரச்சினைக்கு நீதிமன்றம் சென்ற பிறகுதான் சிபிசிஐடி வந்து விசாரிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், காவல்துறை மெத்தனப்போக்குடன் இருந்தது” என்று விமர்சித்துள்ளார்.
பிரியா
பொதுச் செயலாளராக முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் இபிஎஸ்